“அது தற்செயலான சூழல் என்பதை புரிந்து கொள்கிறேன்” -மன்னிப்புக் கோரிய கார்த்திக்கு பவன் கல்யாண் பதில்

pawan kalyan

 திருப்பதி லட்டு விவகாரத்தில் தன்னிடம் மன்னிப்புக் கோரிய நடிகர் கார்த்திக்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: ”அன்புள்ள கார்த்தி, உங்கள் விரைவான பதில் மற்றும் நமது பொதுவான பாரம்பரியங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் மரியாதையை நான் மனதார பாராட்டுகிறேன். திருப்பதி போன்ற நமது புனித தலங்கள் மற்றும் அதன் புனிதமான லட்டு ஆகியவை கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கை தொடர்புடையவை. இது போன்ற விவகாரங்களை மிகவும் கவனமாக கையாள வேண்டியது அவசியம்.

எந்தவித உள்நோக்கங்களுடம் இன்றி நான் இதை உங்களுடைய கவனத்துக்கு கொண்டுவர விரும்பினேன். அதே போல அந்த சூழல் தற்செயலானதுதான் என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன். பிரபலங்களாக நமது கலாச்சாரம் மற்றும் மரபுகளை ஒற்றுமை மற்றும் மரியாதையுடன் நான் அணுக வேண்டும். சினிமா மூலம் தொடர்ந்து ஊக்கமளிக்கும் அதே வேளையில் இந்த மரபுகளை உயர்த்த எப்போதும் பாடுபடுவோம்.

 

null


அர்ப்பணிப்பு மற்றும் திறமையுடன் தொடர்ந்து நம் சினிமாவை வளப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடிகராக உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதையும் தெரிவிக்க விரும்புகிறேன். ’மெய்யழகன்’ படம் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துகள்” இவ்வாறு பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.


முன்னதாக, ’மெய்யழகன்’ புரமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் கார்த்தி மற்றும் படக்குழுவினர் ஹைதராபாத் சென்றிருந்தனர். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளர், நடிகர் கார்த்தியிடம், “லட்டு வேண்டுமா?”என நகைச்சுவையாகக் கேட்க, அதற்கு கார்த்தி, “லட்டு இப்போது சென்சிடிவான விஷயம். அதைப் பற்றி பேசாதீர்கள்” என்று கூறினார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. லட்டு விவகாரம் குறித்து நடிகர் கார்த்தி கிண்டல் செய்துள்ளதாக ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் ஆதங்கம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பேசும்போது, “லட்டு விவகாரத்தை பலரும் கேலி செய்வதை பார்க்க முடிகிறது. சமீபத்திய சினிமா நிகழ்வில் லட்டு சென்சிட்டிவ் டாப்பிக் என பேசப்பட்டுள்ளது. ஒரு நடிகராக நான் உங்களை மதிக்கிறேன். ஆனால், சனாதன தர்மம் என வரும்போது, ஒரு வார்த்தை பேசுவதற்கு முன் நூறு முறை யோசிக்க வேண்டும்” என தெரிவித்தார். இதனையடுத்து நடிகர் கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் பவன் கல்யாணை டேக் செய்து மன்னிப்புக் கோரியிருந்தார்.

Share this story