தீ விபத்தில் சிக்கிய பவன் கல்யாண் மகன்; மருத்துவமனையில் அனுமதி

pawan kalyan

சிங்கப்பூர் பள்ளியில் படித்து வரும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கினார்.

ஜனசேனா கட்சித் தலைவராகவும், ஆந்திர மாநில துணை முதல்வராகவும் இருப்பவர் பவன் கல்யாண். இவரின் இளைய மகன் மார்க் சங்கர். இவர் சிங்கப்பூரில் உள்ள பிரபல பள்ளியில் படித்து வருகிறார். சம்பவத்தன்று, பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மார்க் சங்கர் காயம் அடைந்தார். அவருக்கு கைகள், கால்களில் காயம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தின் போது எழுந்த புகையை சுவாசித்ததால் அவருக்கு சுவாசக்கோளாறும் ஏற்பட்டு இருக்கிறது. இதையடுத்து, அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் காயம் அடைந்துள்ளதை ஜன சேனா கட்சி தமது அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளது.

pawan kalyan
மகனுக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ள விவரம் அல்லூர் சீதாராம ராஜூ மாவட்டத்தில் உள்ள பவன் கல்யாணுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு மேற்கொண்டுள்ள அரசு பயணத்தை நிறுத்திவிட்டு, உடனடியாக அவர் சிங்கப்பூர் செல்ல வேண்டும் என்று அரசு உயரதிகாரிகளும், கட்சியின் முன்னணி தலைவர்களும் பவன் கல்யாணை கேட்டுக்கொண்டுள்ளனர். இதையடுத்து, அவர் உடனடியாக சிங்கப்பூர் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.ஆனால் பவன் கல்யாண், அங்குள்ள குரிடி கிராமத்திலுள்ள பழங்குடியினருக்கு தான் வருகை தருவதாக உறுதியளித்ததாகவும், எனவே முதலில் அவர்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் கேட்ட பிறகு சிங்கப்பூர் செல்கிறேன் என தெரிவித்துள்ளார். பவன் கல்யாண் சிங்கப்பூர் செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள்.
 

Share this story

News Hub