'விடாமுயற்சி’ ரிலீஸ்... அஜித் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்...!

அஜித்குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ திரைப்படம் உலகமெங்கும் இன்று வெளியாகியுள்ளது. அவரது ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ’விடாமுயற்சி’ திரைப்படம் இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது. பல்வேறு சிக்கல்களை கடந்து வெளியாகியுள்ள இத்திரைப்படத்திற்கான கொண்டாட்டம் அதிகாலையிலேயே தொடங்கிவிட்டது. திரையரங்குகளிலும் இணையத்திலும் அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். முதல் காட்சியாக இந்திய நேரப்படி காலை 5 மணிக்கே வெளிநாடுகளில் விடாமுயற்சி திரையிரப்பட்டுவிட்டது. அதனைத் தொடர்ந்து கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் காலையிலேயே முதல் காட்சி திரையிடப்பட்டது. தமிழகத்தில் முதல் காட்சி சிறப்பு காட்சி அனுமதியுடன் காலை 9 மணி முதல் தொடங்கப்பட்டது.
கடந்த 2023ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியான 'துணிவு' திரைப்படத்திற்கு பிறகு இரண்டு வருடங்கள் கழித்து வெளியாகும் அஜித்தின் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் முதல் காட்சி என்றாலும் அதிகாலை முதலே திரையரங்குகளில் ஆடி, பாடி மகிழ்ந்து வருகிறார்கள்.
அஜித்குமார் ரசிகர்கள் உற்சாகமாக கடவுளே அஜித்தே என்ற சொற்களை அதிகமாக பயன்படுத்தி கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக சென்னையில் ரோகிணி தியேட்டரில் பெரிய நடிகர்களின் படம் என்றாலே முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர்கள் அதிகமாக கூடுவது வழக்கம். இதற்கிடையில் ரோகினி தியேட்டர் வளாகத்திற்குள் ரசிகர்கள் பட்டாசு வெடிக்க முற்பட்டனர்.
#WATCH | Tamil Nadu: Fans in Madurai pour milk on the posters of actor Ajith Kumar and dance in celebration as his film 'Vidaamuyarchi' hits the silver screen today. pic.twitter.com/jrMi04ZWpm
— ANI (@ANI) February 6, 2025
அப்போது காவல்துறையினர் அதனை தடுத்து நிறுத்தினார். அப்போது அந்த இடத்தில் சிறிது நேரம் சலசலப்பு காணப்பட்டது. மேலும் கட் அவுட் மேலே ஏறி பாலாபிஷேகம் செய்வதற்கும் அனுமதி கொடுக்கவில்லை. அதனால் ரசிகர்கள் கீழே இருந்தபடியே பால் பாக்கெட்டிலிருந்து கட் அவுட் மற்றும் பேனர்களுக்கு பாலாபிஷேகம் செய்தனர். ’விடாமுயற்சி’ படக்குழுவில் இருந்து நடிகர் ஆரவ் ரசிகர்களுடன் திரைப்படத்தைக் காண சென்னை ரோகிணி தியேட்டருக்கு வந்திருந்தார்.
ரசிகர்கள் அதிகளவில் கூடும் திரையரங்குகளில் ஒன்றாக இருப்பதால் மிகுந்த கட்டுப்பாடுகளுடனே கொண்டாட்டங்கள் நடைபெற்றன. எந்தவித அசம்பாதவிதமும் நிகழாமல் ரசிகர்களின் கொண்டாட்டங்கள் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாகி இருப்பதால், முதல் நாள் வசூல் பெரிதாக இருக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.