‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு எதிராக அடுத்தடுத்து வழக்கு... மன உளைச்சலில் விஜய் ஆண்டனி !

pichaikkaran 2
‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு எதிராக அடுத்தடுத்து வழக்கு தொடர்ந்துள்ளதால் மன உளைச்சல் அடைந்துள்ளதாக நடிகர் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார். 

விஜய் ஆண்டனி இயக்கி நடித்துள்ள திரைப்படம் ‘பிச்சைக்காரன் 2’. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகவுள்ளது. கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி ‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு தடைக்கோரி மாங்காடு மூவீஸ் சார்பில் தயாரிப்பாளர் ராஜ கணபதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான ‘ஆய்வுக்கூடம்’ திரைப்படத்தின் கருவையும், வசனத்தையும் ‘பிச்சைக்காரன் 2’ படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி பயன்படுத்தியுள்ளார். 

pichaikkaran 2

அதனால் இந்த படத்திற்கு தடை விதிக்கவேண்டும் என்றும், அதற்கு இழப்பீடாக 10 லட்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதி, மனுவுக்கு வரும் ஏப்ரல் 18-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி விஜய் ஆண்டனிக்கு உத்தரவிட்டுள்ளார். 

இதற்கிடையே உதவி இயக்குனர் பரணி என்பவர், ‘பிச்சைக்காரன் 2’ படத்தின் மூலக்கதை தன்னுடையது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இது குறித்து அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், இந்த கதையை பல தயாரிப்பாளர்களிடம் கூறியிருந்ததாக கூறியிருக்கிறார். அதே கதை தான் பிச்சனை ‘பிச்சைக்காரன் 2’ படமாக உருவாகியுள்ளதாகவும், எனவே படத்திற்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரியிருந்தார்.

pichaikkaran 2

இந்நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் ஆண்டனி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், ராஜ கணபதியின் படம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது. ‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கு அவரது படத்திற்கு எந்த ஒற்றுமையும் இல்லை. அதேபோன்று கடந்த 1944-ஆம் ஆண்டு முதல் படத்தின் கதை கருவை கொண்டு பல்வேலு படங்கள் வெளியாகியுள்ளது. அதனால் கதையின் கருவை உரிமை கொண்டாட முடியாது என்று தெரிவித்துள்ளார். அதேநேரம் இந்த படத்தின் வெளியீடு தள்ளிப்போனதால் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நஷ்டமும், மன உளைச்சலும் ஏற்பட்டதாக விஜய் ஆண்டனி அந்த மனுவில் தெரிவித்துள்ளார். 

 

 

 

Share this story