தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பின்னணி பாடகி பாம்பே ஜெயஶ்ரீ மகன்!

bombay jayasre

ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் படத்தில் இசையமைப்பாளராக பாம்பே ஜெயஸ்ரீ மகன் அம்ரித் ராம்நாத் அறிமுகமாகிறார். நடிகர் சித்தார்த் கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கு பாம்பே ஜெயஸ்ரீ மகன் அம்ரித் ராம்நாத் இசையமைக்கிறார். சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் என்ற வெற்றிப் படத்தை தொடர்ந்து, தயாரிப்பாளர் அருண் விஸ்வாவின் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் சித்தார்த் நடிக்கும் படத்தை தயாரிக்கிறது. 'மண்டேலா' திரைப்பட புகழ் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளியான ஃபேண்டஸி த்ரில்லர் படம் 'மாவீரன்'. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வா தற்போது ‘8 தோட்டாக்கள்’ புகழ் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடிக்கும் திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இதற்கு தற்காலிகமாக ‘சித்தார்த் 40’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளராக அம்ரித் ராம்நாத் இணைந்துள்ளார். கர்நாடக சங்கீத பிரபலமும், 'வசீகரா', 'ஒன்றா இரண்டா' போன்ற பல்வேறு சினிமா பாடல்களை பாடி தனது குரல் வளத்தால் நம்மை அலாதியான இசை அனுபவத்தில் திளைக்க வைத்தவர் பாம்பே ஜெயஸ்ரீ.

இவரது மகன் அம்ரித் ராம்நாத், ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லைஃப் ஆஃப் பை' (Life of Pi) படத்தில் பாடியுள்ளார். இசை ஆர்வம் அதிகமுள்ள அம்ரித், 25 வயதில் இசையமைப்பாளராக அறிமுகமானார். திரைப்படங்கள் மற்றும் சுயாதீன ஆல்பங்கள் இரண்டிற்கும் இசையமைத்துள்ளார். பிரணவ் மோகன்லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த சூப்பர்ஹிட் மலையாளத் திரைப்படமான ’வர்ஷங்களுக்கு சேஷம்’ (Varshanglukku sesham) திரைப்படத்தில் அவர் இசையமைத்த 'நியாபகம்' என்ற பாடல் அதிக பாராட்டுகளைப் பெற்றது.

இந்நிலையில் தற்போது 'சித்தார்த் 40' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகிறார். ’சித்தார்த் 40’ திரைப்படம் திட்டமிட்டபடி சிறப்பாக உருவாகி வருவது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ’சித்தார்த் 40’ குறித்தான அடுத்தடுத்தத் தகவல்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story