'பொன்னியின் செல்வன்' படத்தில் யார் யார் என்ன கதாபாத்திரம்?... வெளியான எக்ஸ்குளுசிவ் அப்டேட்!
பொன்னியின் செல்வன் படத்தில் யார் யார் என்ற இந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற பட்டியல் கிடைக்கப் பெற்றுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் தனது கனவுத் திட்டமான 'பொன்னியின் செல்வன்' நாவலை திரைப்படமாக உருவாக்கி வருகிறார். கொரோனா இரண்டாம் அலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு சமீபத்தில் பாண்டிச்சேரியில் துவங்கியது. ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்து வருகின்றனர்.
பொன்னியின் செல்வன் நாவல் உலகம் முழுவதும் பலரால் அறியப்படும் நாவல். எனவே பொன்னியின் செல்வன் படத்தில் யார் யார் என்னென்ன கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு தற்போது நிலவி வருகிறது. தற்போது முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள் யார் என்ற பட்டியல் வெளியாகியுள்ளது.

(Pictures Credits- Vikatan)
அதன்படி ஆதித்த கரிகாலன் மற்றும் அருள்மொழிவர்மன் ஆகியோரின் தந்தையும் சோழநாட்டின் அரசருமான சுந்தரசோழர் கதாபாத்திரத்தில் முன்னதாக அமிதாப்பச்சன் நடிப்பதாக இருந்தது. தற்போது அவருக்கு பதிலாக பிரகாஷ்ராஜ் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம், சோழ இளவரசன் அருள்மொழிவர்மன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி, கதையின் நாயகன் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி, சோழநாட்டு இளவரசி கதையின் நாயகி குந்தவி கதாபாத்திரத்தில் திரிஷா, கதையின் முக்கிய கதாப்பாத்திரமான நந்தினி மற்றும் மந்தாகினி என்ற இரட்டை கதாபாத்திரங்களில் ஐஸ்வர்யாராய் நடிக்கிறார்கள்.

துருதுரு பெண்ணாக வலம் வரும் பூங்குழலி கதாபாத்திரத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லட்சுமி அருள்மொழிவர்மனின் காதலி வானதியாக சோபிதா துலிபாலா நடிக்கின்றனர்.
பெரிய பழுவேட்டரையர் ஆக சரத்குமாரும் சின்ன பழுவேட்டரையர் ஆக பார்த்திபனும் கடம்பூர் சம்புவரையராக நிழல்கள் ரவியும் நடிக்கின்றனர்.

கதையின் முக்கிய கதாபாத்திரமான ஆழ்வார்க்கடியான் நம்பி கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஜெயராம் நடிக்கிறார். அநிருத்தப் பிரம்மராயர் கதாபாத்திரத்தில் பிரபு நடிக்கிறார். சேந்தன் அமுதன் கதாபாத்திரத்தில் நடிகர் அஸ்வின், கந்தன் மாறன் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு, மதுராந்தகன் கதாபாத்திரத்தில் அர்ஜுன் சிதம்பரம், பார்த்திபேந்திர பல்லவன் கதாபாத்திரத்தில் ரகுமான், குடந்தை ஜோதிடர் கதாபாத்திரத்தில் மோகன்ராவ் ஆகியோர் நடிக்கின்றனர். மலையமான் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் லால் நடிக்கிறார்.
பாண்டிநாட்டு எதிரிகளான சோமன் சாம்பவன் கதாபாத்திரத்தில் ரியாஸ் கானும், ரவிதாசன் கதாபாத்திரத்தில் கிஷோரும் நடிக்கின்றனர். இடும்பன்காரி மற்றும் ரேவதாச கிராமாவிதன் ஆகிய கதாபாத்திரங்களில் யார் நடிக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை.
பிரபல வார இதழான விகடனில் ஓவியமாகவே இதை வெளியிட்டுள்ளனர்.






