அழகிய லைலாவை விட பூங்கொடி டீச்சர் எனக்கு நெருக்கமானது.. நிகிலா விமல் நெகிழ்ச்சி...
நவ்வி ஸ்டுடியோஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் மற்றும் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் இணைந்து தயாரித்து, இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் ‘வாழை’. கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி வெளியான இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்நிலையில், வாழை படத்தின் 25ஆம் நாள் வெற்றி விழாவில், வாழை படத்தில் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களுக்கும் நினைவுப் பரிசுகளை இயக்குநர் மாரி செல்வராஜ் வழங்கினார்.
பின்னர், நிகழ்ச்சி மேடையில் பேசிய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், “பரியேறும் பெருமாள் படத்துக்குப் பிறகு வாழையில் உங்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது இயக்குநர்கள் ரஞ்சித், மாரி, நலன், கார்த்திக் சுப்புராஜ் என எல்லோரும் தேர்ந்தெடுத்து நல்ல படங்களை இயக்கி வருகிறார்கள். நல்ல படங்களை எடுத்து, அதன் மூலம் வருமானம் ஈட்டும் போது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. சினிமா மிக நல்ல பாதையில் போய்க்கொண்டிருக்கிறது. வாழை ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. என்னுடைய சிறந்த திரைப்படங்களில் வாழை எப்போதும் முதன்மையாக இருக்கும். இந்த வெற்றி விழா உணர்ச்சிப்பூர்வமாக இருக்கிறது. வாழை ஒரு வரலாற்றுப் படம்” என்றார்.
தொடர்ந்து பேசிய நடிகை நிகிலா விமல், “இயக்குநர் மாரி செல்வராஜுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கதாபாத்திரத்தை எனக்கு தந்ததற்கு அவருக்கு நன்றி. இந்த திரைப்படத்தின் மூலமாக என்னை அனைவரும் பூங்கொடி டீச்சர் என்று அழைப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. அழகிய லைலா கொடுத்த புகழை விட, பூங்கொடி டீச்சர் கொடுத்த பெயர்தான் எனக்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது. இந்த மொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.