பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் நடிக்கும் நாகார்ஜுனா?!

பூரி ஜெகந்நாத் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாகார்ஜுனா நாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பூரி ஜெகந்நாத் இயக்கத்தில் கடைசியாக வெளியான இரண்டு படங்கள் ‘லைகர்’ மற்றும் ‘டபுள் ஐஸ்மார்ட்’. இந்த இரண்டுமே பெரியளவில் வெற்றி பெறவில்லை. இதில் ‘லைகர்’ திரைப்படம் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளானது. முன்னணி இயக்குநரான பூரி ஜெகந்நாத் விரைவில் மீண்டும் வெற்றியுடன் திரும்ப வேண்டும் என்று பலரும் குறிப்பிட்டார்கள்.
தற்போது தனது அடுத்த படத்துக்காக நாகார்ஜுனாவை சந்தித்து பேசியிருக்கிறார் பூரி ஜெகந்நாத். முதற்கட்ட சந்திப்பு மட்டுமே முடிவடைந்திருப்பதால், விரைவில் அடுத்தகட்ட சந்திப்பில் இந்தக் கூட்டணி இணையுமா என்பது தெரியவரும். ‘சூப்பர்’ மற்றும் ‘சிவமணி’ ஆகிய படங்களில் இந்தக் கூட்டணி முன்பே இணைந்து பணிபுரிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ரஜினி நடித்து வரும் ‘கூலி’ மற்றும் தனுஷ் நடித்து வரும் ‘குபேரா’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் நாகார்ஜுனா. இந்த இரண்டு படங்களுமே முடியும் தருவாயில் இருக்கிறது. இதனால் விரைவில் அவர் நாயகனாக நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.