சொத்துப் பிரச்சினை : செய்தியாளர்களை தாக்கிய பிரபல தெலுங்கு நடிகர்
தெலுங்கில் மூத்த நடிகராக வலம் வரும் மோகன் பாபு தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். இவருக்கு லட்சுமி மஞ்சு என்ற மகளும் விஷ்ணு மஞ்சு மற்றும் மனோஜ் மஞ்சு என்ற 2 மகன்களும் இருக்கின்றனர். இவர்களது குடும்பத்தில் சமீப காலமாக சொத்துப் பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது.
மோகன் பாபு தனது மகன் மனோஜ் மஞ்சு மீது சொத்து தகராறு தொடர்பாக ரச்சகொண்டா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மனோஜும் அவரது மனைவி மோனிகாவும் 30 பேர்களை கொண்டு எனது வீட்டில் அத்துமீறி நுழைந்து ஊழியர்களை மிரட்டியதாக தெரிவித்திருந்தார். இது தொடர்பாக அவரது மகன் மனோஜ் பேசுகையில், சொத்துக்காக போராடவில்லை, சுயமரியாதைக்காக போராடுகிறேன் என செய்தியாளர்களிடம் கூறினார். மேலும் தன் மீது தந்தை மோகன் பாபு தவறான குற்றசாட்டுகளை வைப்பதாக சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே மனோஜும் மோகன் பாபு மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
டிவி நிருபர் மைக்-ஐ பிடுங்கி..துரத்தி துரத்தி.. அடித்த நடிகர் மோகன் பாபு..! #telugunewschannel #telungana #mohanbabu pic.twitter.com/47bk8n7uLy
— Thanthi TV (@ThanthiTV) December 10, 2024
இந்த நிலையில் நேற்று(10.12.2024) ஜல்பல்லியில் உள்ள மோகன் பாபுவின் வீட்டிற்கு மனோஜ், அவரது மனைவி மோனிகா உள்ளிட்ட சிலர் அத்துமீறி நுழைய முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது வீட்டின் பாதுகாவலர்கள் கேட்டை திறக்க மறுத்துள்ளனர். இதனால் மனோஜுக்கும் பாதுகாவலர்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. பின்பு கேட்டை தள்ளி மனோஜ் உள்ளே நுழைந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட செய்தி சேகரிக்க பத்திரிக்கையாளர்கள் அங்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டை விட்டு மோகன் பாபு வெளியே வந்துள்ளார். அவரை பார்த்ததும் செய்தியாளர்கள் மைக்கை நீட்டி கேள்வி கேட்க முற்பட்டனர். ஆனால் கடும் கோபத்தில் இருந்த மோகன்பாபு மைக்கை பிடித்து செய்தியாளர்களை தாக்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது தொடர்பாக் மோகன் பாபு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மோகன் பாபுவின் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.