கமல் பேச்சுக்கு கர்நாடகாவில் எதிர்ப்பு - போஸ்டர்கள் கிழிப்பு

தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என பேசிய கமலுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள `தக் லைப் திரைப்படம் வரும் ஜூன் 5-ந்தேதி வெளியாக உள்ளது.
இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் கமல்ஹாசன், "உயிரின் உறவே தமிழே! எனது வாழ்க்கையும், குடும்பமும் தமிழ் மொழிதான். எனது குடும்பம் இங்கு இருக்கிறது. அதனால்தான் சிவராஜ்குமார் இங்கு வந்துள்ளார். அவரது மொழி (கன்னடம்) தமிழ் மொழியில் இருந்து பிறந்தது. அவரும் நமது குடும்பத்தில் ஒரு அங்கமாவார்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், கமல்ஹாசனின் பேச்சுக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதாவது தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக கூறி கன்னட மக்களை கமல் அவமதித்துவிட்டதாக கன்னட அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.
கன்னட ரக்ஷன வேதிகே தலைவர் பிரவீன் ஷெட்டி கூறுகையில், நாங்கள் கமலை எச்சரிக்கிறோம். உங்களுக்கு கர்நாடகாவில் வியாபாரம் வேண்டும். ஆனாலும் கன்னடத்தை அவமதிக்கிறீர்களா?. இன்று (நேற்று) நீங்கள் எங்கள் மாநிலத்தில் இருந்தீர்கள். உங்கள் மீது கருப்பு மை பூச நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால் நீங்கள் ஓடிவிட்டீர்கள்.
கர்நாடகாவிற்கும் அதன் மக்களுக்கும் எதிராக பேசினால் உங்களுக்கு எதிரான போராட்டங்கள் நடத்தப்படும் என எச்சரிக்கிறோம். உங்கள் படம் கர்நாடகாவில் தடை செய்யப்படும் என எச்சரிக்கிறோம்" என தெரிவித்தார்.
படத்தின் போஸ்டர் கர்நாடகாவில் எங்கு எல்லாம் ஒட்டப்பட்டுள்ளதோ, எங்கெல்லாம் படத்திற்காக விளம்பரத் தட்டிகள் வைக்கப்பட்டுள்ளதோ அவற்றையெல்லாம் கன்னட அமைப்பினர் கிழித்து வருகிறார்கள். இதே போல் கர்நாடகா மாநில பா.ஜ.க தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, நடிகர் கமல்ஹாசனை எக்ஸ் வலைதளத்தில் கடுமையாக விமர்சித்து உள்ளார். அதில் கன்னடம் குறித்து கமல்ஹாசனின் கருத்துக்கள் பண்பாடற்ற நடத்தை மற்றும் ஆணவத்தின் உச்சம், என்றும் கலைஞர்கள் அனைத்து மொழிகளையும் மதிக்க
வேண்டும். தமிழைப் புகழ்ந்து சிவராஜ்குமாரை அழைத்து கமல்ஹாசன் கன்னடத்தை அவமதித்து விட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். மேலும் கன்னட மொழிக்கு 2500 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் உள்ளது என்றும் கமல்ஹாசன் இந்து மதத்தை பல முறை அவமதித்து, மத உணர்வுகளை புண்படுத்தியுள்ளார். இப்போது 6.5 கோடி கன்னடர்களை புண்படுத்தியுள்ளார் என்று அதில் குற்றம் சாட்டியுள்ளார்.