“வாழ்வில் வெற்றிபெற நல்ல எண்ணம் வேண்டும்" - பிரதீப் ரங்கநாதன்

'கோமாளி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்ததாக 'லவ் டுடே' படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். இப்படம் பெரும் வரவேற்பு பெற்றதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ட்ராகன் என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் குறும்பட விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட பிரதீப் ரங்கநாதன், பரிசு வென்றவர்களுக்கு விருது வழங்கினார். அப்போது மேடையில் பேசிய அவர், “விருது வாங்குவது மட்டும்தான் சந்தோஷம் என நினைத்து கொண்டிருந்தேன். ஆனால் கொடுப்பதும் சந்தோஷம்தான் என இப்போது புரிந்து கொண்டேன். குறும்பட காலம் கிட்டதட்ட முடிந்த மாதிரி இருக்கிறது. சில போட்டிகள் மட்டும் நடக்கிறது. பரிசு வெல்லாதவர்கள் துவண்டுபோய்விடக் கூடாது” என்றார்.
அவரிடம் அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “ட்ராகன் படம் பிப்ரவரியில் ரிலீஸாகிவிடும். விக்னேஷ் சிவனின் எல்.ஐ.கே. படத்திற்கு பிறகு இன்னொரு படம் நடிக்கிறேன். ஜனவரியில் இருந்து படப்பிடிப்பு தொடங்குகிறது” என்றார்.
பின்பு அவரிடம் தொகுப்பாளர் ஒரு நடிகராக உங்களுடைய பலம் என்ன என கேட்க அதற்கு பதிலளித்த அவர், “நல்லது மட்டுமே நான் நினைக்கிறேன். சினிமா மட்டும் இல்லை எந்த தொழிலாக இருந்தாலும் நல்ல எண்ணத்தோடு வேலை செய்தால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும். அதோடு நான் கடுமையாக உழைப்பேன். அதுவும் என் பலத்துக்கு காரணம்” என்றார்.