“எங்கள் இதயங்களை வென்றுவிட்டீர்கள்” - பிரகாஷ் ராஜ்

prakash raj

சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,700 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் உள்ளடக்கிய இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து தகுதி பெற்ற 70 வீரர்கள், 47 வீராங்கனைகள் என மொத்தம் 117 வீரர்கள் 16 விளையாட்டுகளில் கலந்துகொண்டு வருகின்றனர். இதுவரை 3 பதக்கங்கள் இந்தியா வென்றுள்ளது. இத்தகைய சூழலில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் நேற்று நடைபெற்ற மகளிர் மல்யுத்தம் 50 கிலோ பிரிஸ்டைல் பிரிவில் எதிர்த்து மோதிய கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மானை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் இறுதிச் சுற்றுக்கு முன்னேறி இருந்த அவர், இன்று திடீரென தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் எடை 100 கிராம் அதிகமாக இருப்பதால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் பேரதிர்ச்சியை எழுப்பி உள்ளது. இதையடுத்து பல்வேறு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் எனப் பலரும் வினேஷ் போகத்துக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் ஆறுதல் கூறியுள்ளார். அந்த பதிவில், வினேஷ் போகத்தை குறிப்பிட்டு, “நீங்கள் எங்கள் இதயங்களை வென்றுவிட்டீர்கள். உங்களது பங்களிப்பு அடுத்த தலைமுறையை ஊக்குவிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.  

Share this story