‘இது எனக்கு மறுபிறவி’.. ரெட் கார்டு நீக்கியது குறித்து வடிவேலு மகிழ்ச்சி !
திரைப்படங்களில் நடிப்பதற்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு நீக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது என நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவனாக இருப்பவர் நடிகர் வடிவேலு. கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிம்புதேவன் இயக்கத்தில் உருவான ‘இம்சை அரசன் 23- ம் புலிகேசி’ நடித்திருந்தார் வடிவேலு. சூப்பர் ஹிட்டடித்த இப்படத்தை இயக்குனர் ஷங்கர் பிரமாண்டமாக தயாரித்திருந்தார். இந்த வெற்றிக்கு பிறகு மீண்டும் இணைந்த இக்கூட்டணி, இம்சை அரசன் 24- ம் புலிகேசி படத்தின் பணிகளில் ஈடுபட்டது. ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் உள்ளிட்டவை வெளியான நிலையில் படம் நிறுத்தப்பட்டது.

இதற்கு காரணம், வடிவேலு படப்பிடிப்புக்கு சரியாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என கூறப்பட்டது. இதையடுத்து பல கோடி ரூபாய் வடிவேலுவால் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி ஷங்கர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் வடிவேலுவுக்கு ரெட் கார்டு போடப்பட்டு படத்தில் நடிக்க தடைவிதிக்கப்பட்டது. இதன்காரணமாக இதுவரை அவரை வைத்து படமெடுக்க இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் முன்வரவில்லை.

இதற்கிடையே பல ஆண்டுகளாக இழுபறியாக இருந்த இந்த விவகாரத்தில் சுமூக தீர்வு காணப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் சங்கம் நேற்று அறிவித்தது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் வடிவேலு மற்றும் தயாரிப்பு நிறுவனத்தை அழைத்து பேசி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக தயாரிப்பாளர் சங்கம் விளக்கமளித்தது. இதனால் திரைப்படங்களில் நடிக்க வடிவேலுக்கு போடப்பட்டிருந்த ரெட் கார்டு நீக்கியது.

இந்நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட ரெட் கார்டு நீக்கப்பட்டது குறித்து நடிகர் வடிவேலு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், இது எனக்கு மறுபிறபி என்றும், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் எனது ரசிகர் மன்றம் என்றும், அவர்கள் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார். மேலும் சுராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘நாய் சேகர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்கவுள்ளதாகவும், அதில் தான் ஹீரோவாக நடிப்பதாகவும் வடிவேலு தெரிவித்துள்ளார். இதோடு 2 படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டு, பின்னர் மற்ற படங்களில் காமெடியனாக நடிப்பேன் என்றும் கூறினார். வடிவேலு மீண்டும் நடிக்க வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

