காசோலை மோசடி வழக்கு- பிரபல தயாரிப்பாளருக்கு சிறை தண்டனை உறுதி..!

Producer

காசோலை மோசடி வழக்கில் திரைப்படத் தயாரிப்பாளரான ஜெ. சதீஷ்குமாருக்கு விதிக்கப்பட்ட 6 மாதம் சிறை தண்டனை நிறுத்திவைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தி.நகரைச் சேர்ந்த ஜெஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனரான திரைப்படத் தயாரிப்பாளர் ஜெ. சதீஷ்குமார் தனது நிறுவனத்தின் சார்பில் ,வா டீல், மெல்லிசை, புரியாத புதிர், தரமணி, சிவப்பு எனக்கு பிடிக்கும், அண்டாவைக் காணோம் ஆகிய படங்களை தயாரிப்பதற்காக சினிமா பைனான்சியரான ககன் போத்ராவிடம் 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் சுமார் 2.6 கோடி கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த தொகைக்காக சதீஷ்குமார் வழங்கிய  35 லட்சம் மற்றும் 45 லட்சம் மற்றும்  27 லட்சத்துக்கான வங்கி காசோலைகள் அவர் வழங்கினார். சதீஷ்குமார் கொடுத்த காசோலை பணமின்றி திரும்பியதால் சதீஷ்குமார் மீது ககன்போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்த சென்னை ஜார்ஜ் டவுன் 4-வது விரைவு நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.கே.என்.சந்திரபிரபா குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால்  திரைப்படத் தயாரிப்பாளரான ஜெ. சதீஷ்குமாருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்தும், மேலும் கடனாக பெற்ற தொகையை வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டார்.


இந்த தண்டனையை எதிர்த்து ஜெ.சதீஷ்குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் தண்டனை ரத்து செய்யவும்,  நிறுத்திவைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெ.சதீஷ்குமார் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக வில்லை இதனையடுத்து தண்டனை நிறுத்துவைக்க கோரிய  மனுவை தள்ளுபடி செய்வதாகவும் பிரதான மேல் முறையீடு வழக்கை 21 ஆவது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றியும் விசாரணை ஆகஸ்ட் 12 தேதிக்கு  தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Share this story