“நடிகர் ஸ்ரீ-யை தொடர்பு கொள்ள முடியவில்லை” : தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு வருத்தம்...

shri

“நடிகர் ஸ்ரீ-யை தொடர்பு கொள்ள முடியவில்லை” என்று ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.

                     
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்' தொடரின் மூலம் அறிமுகமானார் நடிகர் ஸ்ரீ. பின்னர் 'வழக்கு எண் 18-9', 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்', 'மாநகரம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.அவர் கடைசியாக நடித்த படம் 'இறுகப்பற்று'. இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இதனிடையே கடந்த சில நாட்களாக உடல் மெலிந்து, ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ள நடிகர் ஸ்ரீயின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த பலரும், அவர் ஏன் இந்த நிலைக்கு ஆளானார்? என்ன ஆனது என பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.


இந்நிலையில், 'இறுகப்பற்று' படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நடிகர் ஸ்ரீயின் உடல் நலம் குறித்து நாங்கள் உண்மையில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளோம். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உட்பட நாங்களும் அவரை தொடர்பு கொள்ள நீண்ட நாட்களாக முயற்சித்து வருகிறோம். அதைச்சுற்றி நிறைய ஊகங்கள் வெளியாவது துரதிர்ஷ்டவசமானது. நடிகர் ஸ்ரீயை தொடர்புகொண்டு, அவரை நல்ல உடல்நலத்துடன் மீட்டு கொண்டுவருவது தான் எங்களின் முதன்மையான நோக்கம். அதற்கு யாரேனும் உதவிகரமாக இருந்தால் அவர்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருப்போம்” என தெரிவித்துள்ளார்.

Share this story