‘காந்தாரா: சாப்டர் 1’ படப்பிடிப்புக்கு எதிர்ப்பு

ரிஷப் ஷெட்டி இயக்கி வரும் ‘காந்தாரா: சாப்டர் 1’ படப்பிடிப்புக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
ரிஷப் ஷெட்டி கன்னடத்தில் இயக்கி, நடித்த ‘காந்தாரா’ திரைப்படம், தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இந்தப் படத்தின் முதல் பாகம் இப்போது உருவாகி வருகிறது. ‘காந்தாரா: சாப்டர் 1’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம், அதிக பட்ஜெட்டில் உருவாகிறது.
இதன் கடைசிக்கட்ட படப்பிடிப்பு இப்போது கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் ஹெரூர் வனப்பகுதியில் கடந்த 2 -ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்நிலையில், வனத்துக்குள் சென்று படப்பிடிப்பை நடத்தியதற்கும் அங்கு வெடிபொருட்களைப் பயன்படுத்தியதாகவும் வனப்பகுதிக்கு தீ வைத்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதாகவும் கூறி, அங்குள்ள கிராமத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். காட்டில் தீ வைப்பதால் வனவிலங்குகள் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வருவதாகக் கூறிய அவர்கள் படப்பிடிப்பை உடனடியாக நிறுத்தி சுற்றுச்சூழலைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
இதுதொடர்பாக படக்குழுவுக்கும் கிராமத்தினருக்கும் ஏற்பட்ட மோதலில் அக்கிராமத்தை சேர்ந்த ஹரிஷ் என்ற இளைஞர் காயமடைந்தார். அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதையடுத்து படக்குழு மீது எசலூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.