2 நாட்களில் ’புஷ்பா 2’ ரூ.400 கோடி வசூல் சாதனை !
அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 திரைப்படம் உலக அளவில் 400 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
’புஷ்பா 2’ திரைப்படம் உலக அளவில் 400 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி வெளியான திரைப்படம் புஷ்பா 2. புஷ்பா முதல் பாகம் மாபெரும் வெற்றி அடைந்ததால் இரண்டாம் பாகம் அறிவிக்கப்பட்டது முதலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு தொற்றிக் கொண்டது.
'பாகுபலி' திரைப்படத்திற்கு பிறகு 'புஷ்பா' திரைப்படம் தெலுங்கு சினிமாவிற்கு முக்கியமான படமாக அமைந்தது. தென்னிந்தியாவை விட புஷ்பா முதல் பாகத்திற்கு வட இந்தியாவில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் புஷ்பா முதல் பாகத்திற்காக அல்லு அர்ஜூன் மற்றும் இசையமைப்பாளர் தேவி பிரசாத் ஆகியோர் தேசிய விருது வென்றனர். இதனால் புஷ்பா 2 திரைப்படத்திற்கு மிகப்பெரிய ஓபனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், புஷ்பா 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளியானது. முதல் நாளில் இந்திய அளவில் 265 கோடி வசூல் செய்த நிலையில், 'புஷ்பா 2' திரைப்படம் உலக அளவில் 294 கோடி வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்தது. இதன் மூலம் உலக அளவில் அதிக வசூல் செய்த இந்திய பட வரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.
முதல் நாளில் தெலுங்கு மொழியில் 85 கோடி வசூல் செய்த நிலையில், ஹிந்தியில் 67 கோடியும், தமிழில் 7 கோடியும் வசூல் செய்தது. இந்நிலையில் பிரபல சினிமா வர்த்தக இணையதளம் சாக்னில்க் வெளியிட்டுள்ள தகவலின் புஷ்பா 2 திரைப்படம் இரண்டாம் நாள் சேர்த்து 400 கோடிக்கு மேல் வசூல் செய்து இமாலய சாதனை படைத்துள்ளது. மேலும் இந்திய அளவில் 265 கோடி வசூல் செய்துள்ளது.
After an historic opening, #Pushpa2 holds extremely well on the second day.
— Manobala Vijayabalan (@ManobalaV) December 7, 2024
Allu Arjun starrer goes past ₹400 cr mark in just 2 days.
WW Box Office
Day 1… pic.twitter.com/tdX4aHcBgp
இதில் தெலுங்கு மொழியில் 118 கோடியும், ஹிந்தியில் 125 கோடியும், தமிழில் 13 கோடியும் வசூல் செய்துள்ளது. இந்த சாதனை மூலம் புஷ்பா முதல் பாகத்தின் வாழ்நாள் வசூலை 2 நாட்களில் 'புஷ்பா 2' முறியடித்துள்ளது. முன்னதாக புஷ்பா 2 திரைப்படத்தின் டிக்கெட் விலை உயர்வுக்கு ஆந்திரா, தெலுங்கானா அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து நடிகர் அல்லு அர்ஜூன் ஆந்திரா, தெலுங்கானா அரசுக்கு நன்றி தெரிவித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.