ரிலீசுக்கு முன்பே சாதனை படைத்த புஷ்பா 2 ?
புஷ்பா முதல் பாகத்தின் வெற்றிக்குப் பிறகு சுகுமார் - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘புஷ்பா 2 தி ரூல்’. மைத்ரி முவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், ஃபஹத் ஃபாசில் வில்லனாகவும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை சாம் சி.எஸ் கவனித்துள்ளார்.
இப்படம் நாளை(05.12.2024) தமிழ், தெலுங்கு என மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில் சென்னை, ஹைதராபாத், கொச்சி, மும்பை என பல்வேறு பகுதிகளில் புரொமோஷன் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடந்தது. இதையடுத்து படத்தில் இருந்து ‘கிஸ்ஸிக்’ மற்றும் ‘பீலிங்க்ஸ்’ ஆகிய பாடலின் லிரிக் வீடியோக்கள் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. குறிப்பாக ‘பீலிங்க்ஸ்’ பாடலில் அல்லு அர்ஜூன் மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் ஆடிய நடனம் முகம் சுளிக்கும் வகையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. மேலும் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து படத்திற்கான முன்பதிவு டிக்கெட் சமீபத்தில் தொடங்கி முழு வீச்சில் நடந்து வருகிறது. இந்த நிலையில் முன்பதிவில் மட்டும் உலகம் முழுவதும் இப்படம் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்படம் கல்கி 2898 ஏ.டி படத்திற்கு பிறகு இந்தாண்டு டிக்கெட் முன்பதிவில் ரூ.100 கோடியை வசூலித்து சாதனை படைத்துள்ளது. மேலும் முதல் நாள் வசூலில் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கு மேலாக வசூலிக்கும் என கூறப்படுகிறது. இது வரை இந்திய சினிமாவில் முதல் நாளில் அதிகபட்சமாக ஆர்.ஆர்.ஆர். படம் ரூ.223 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.