பிவி சிந்து திருமண வரவேற்பு: குடும்பத்துடன் ஸ்டைலிஷாக வந்த அஜித்குமார் வைரலாகும் வீடியோ!

ak

நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து திருமண வரவேற்பு நிகழ்வில் நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்தினருடன் பங்கேற்றார். பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து திருமண வரவேற்பு நிகழ்வில் நடிகர் அஜித் பங்கேற்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து, 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் 2020ஆம் ஆண்டு டோக்யோ ஒலிம்பிக்ஸில் வெண்கல பதக்கமும் வென்று சாதித்துள்ளார். இந்நிலையில் பிவி சிந்து தனது நண்பரான வெங்கட சாய் தத்தா என்பவரை கடந்த டிசம்பர் 22ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

வெங்கட சாய் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் நடத்தி வருகிறார். பிவி சிந்து திருமணம் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் உள்ள ரஃப்பைல்ஸ் நட்சத்திர விடுதியில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் அரசியல் தலைவர்கள் முதல் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்று திருமண தம்பதியை வாழ்த்தினர்.இதனைத்தொடர்ந்து பிவி சிந்து திருமண வரவேற்பு நிகழ்வு நேற்று (டிச.24) ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் அஜித்குமார் தனது குடும்பத்தினருடன் பங்கேற்றார். தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக காட்சியளிக்கும் அஜித்குமார், கருப்பு நிற கோட் சூட் உடையில் தனது மனைவி ஷாலினி மற்றும் தனது மகள், மகன் ஆகியோருடன் திருமண வரவேற்பில் பங்கேற்றார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.



அஜித்குமார் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ’குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முன்னதாக ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ’குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்குமார் எடை குறைத்து காணப்படும் புகைப்படங்கள் இணையத்தில் சில நாட்களுக்கு முன் வெளியானது.



அதே நேரத்தில் அஜித்குமார் துபாயில் பங்கேற்கவுள்ள கார் பந்தயத்திற்காக தான் எடை குறைத்துள்ளார் எனவும் கூறப்படுகிறது. இதனிடையே மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள ’விடாமுயற்சி’ திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் இந்த வார இறுதியில் 27ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Share this story