“என்னை உழுக்கியெடுத்துருச்சு... அழுகைய கட்டுப்படுத்த முடியல” - ஆர்.ஜே. பாலாஜி
மாரி செல்வராஜ் தனது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களைக் கொண்டு இயக்கியுள்ள திரைப்படம் வாழை. இப்படத்தை மாரி செல்வராஜும் அவரது மனைவி திவ்யாவும் இணைந்து தாயாரித்துள்ளர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்கிய இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இரண்டு சிறுவர்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க, கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி உள்ளிடோர் நடித்திருந்தனர். இப்படம் கடந்த 23ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
இப்படத்திற்கு வெற்றிமாறன், பா.ரஞ்சித், மிஷ்கின், நெல்சன், ராம், பாரதிராஜா, மணிரத்னம், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் படத்தை பாராட்டி படக்குழுவை வாழ்த்தினர். திரை பிரபலங்களைத் தாண்டி அரசியல் கட்சித் தலைவர்களான திருமாவளவன் எம்.பி, சீமான், ராமகிருஷ்ணன் ஆகியோர் மாரி செல்வராஜை பாராட்டியிருந்தனர்.
இதனிடையே மாரி செல்வராஜ் இப்படம் பார்த்து பாராட்டியவர்களின் காணொளியை வரிசையாகத் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் பாலா, சூரி, பிரதீப் ரங்கநாதன் உள்ளிட்ட இயக்குநர்கள் இப்படத்தை பாராட்டி பேசியிருந்தை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து தற்போது ஆர்.ஜே. பாலாஜி பாராட்டி பேசிய காணொளியை பகிர்ந்துள்ளார். அதில் ஆர்.ஜே.பாலாஜி, “மீசைய முறுக்கு ஆதி மாதிரி மாரி செல்வராஜ் அவரோட கதையை எடுத்திருப்பார், வாழை படத்தில் குழந்தைகள் இருக்காங்க அதுனால பள்ளி பருவ காதல் இருக்கும்னு நினச்சு ஜாலியாக படம் பார்க்க போனேன்.
ஆனால் படம் பார்த்து வெளியே வந்ததும் என்னை உழுக்கியெடுத்துருச்சு. இன்னும் படத்தை பத்தி இந்த மாதிரி 15 நிமிஷம் பேசனும்னு நினைச்சேன், ஆனால் என்னால் பேசமுடியவில. ஏன்னா பயங்கரமா என்னை படம் அழ வச்சிருச்சு. அதை கட்டுப்படுத்திக் கிட்டு வெளியே வந்துருக்கேன். நான் ரொம்ப இலகிய சுபாவம் கொண்டவன். ப்பா... என்ன ஒரு வாழ்க்கை என்று சொல்ல கூடிய அளவுக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுக்கிற வகையில் பதிவு பண்ணியிருக்கார் மாரி செல்வராஜ். நான் சென்னையில் வளர்ந்த பையன். அங்கு நான் தெருத்தெருவாக சுத்தியிருக்கேன். ஆனால், மாரி செல்வராஜின் வாழை படம் என்ன ரொம்ப பாதிச்சிருச்சு. கண்டிப்பா படத்தை தியேட்டரில் பாருங்க. அதிலிருந்து வெளிய வர எல்லோருக்கும் இரண்டு மூணு நாள் ஆகும்” என்றார்.