நடிகைகளின் பாலியல் பிரச்னைகளுக்கு யார் பொறுப்பு? - நடிகை ராதிகா கேள்வி

Radhika

நடிகைகளுக்கு நடைபெறும் பாலியல் பிரச்னைகளுக்கு தயாரிப்பாளர்கள் தான் பொறுப்பு எனவும், பல நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால் பக்கத்தில் இருக்கும் பெண்களுக்கு குரல் கொடுக்க யாரும் வருவதில்லை என நடிகை ராதிகா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

சென்னை : ராடன் நிறுவனம் தயாரித்துள்ள 'தாயம்மா குடும்பத்தார்' என்னும் தொடர் குறித்து இன்று சென்னை சைதாப்பேட்டை சிஐடி நகரில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடிகை ராதிகா சரத்குமார் மற்றும் தொடரில் நடிக்கும் நடிகர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர், "ஹேமா கமிட்டி தொடர்பாக, கடந்த 4 நாட்களுக்கு முன் நான் கூறிய குற்றச்சாட்டுகள் உண்மையா என்று எஸ்ஐடியில் இருந்து தொலைப்பேசி வாயிலாக கேட்டனர். நானும் அதற்கு பதில் கூறினேன். ஆனால், நான் புகாராக அளிக்கவில்லை. தமிழ் சினிமாத் துறையில் படித்தவர்கள் அதிகமாக வந்துள்ளனர். இதனால் தற்போது பிரச்னைகள் குறைந்துள்ளது.

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியிடப்பட்டு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் இதுபோல சரிசெய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். எங்களுக்கு பிரச்னைகள் நேர்ந்த போது சில ஹீரோக்கள் எங்களுடன் நிற்பார்கள், சில ஹீரோ கண்டுகொள்ளகூடமாட்டார்கள். இன்றுவரை இதற்காக பெண்கள் நாங்கள் போராடிக்கொண்டு தான் இருக்கிறோம்" என்றார் ராதிகா.

உங்களுக்கு நேர்ந்தது குறித்து நீங்கள் ஏன் புகார் அளிக்கவில்லை என்ற கேள்விக்கு, "நான் அதை பற்றி பேச விரும்பவில்லை. மக்களிடமும், ஊடகங்களிமும் பேசி எந்த பயனும் இல்லை. மேலும், நீதிமன்றத்தை நாடினால் நாட்கள் ஆகின்றது. நிர்பயா வழக்கை நாங்கள் பார்த்து பயந்துள்ளோம். அது கடந்த 2012ல் ஆரம்பித்து 2020ல் தான் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது" என்று ராதிகா தெரிவித்தார்.

இதுபோல சினிமா நடிகைகளுக்கு நடைபெறும் பாலியல் பிரச்னைகளுக்கு யார் பொறுப்பு என்ற கேள்விக்கு, "தயாரிப்பாளர்கள் தான் இதற்கு பொறுப்பாக இருக்க வேண்டும். நடிகைகளை அவர்கள் தான் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். முன்பு இருந்தது போல இப்போது இல்லை. இருந்தாலும், வேறு எங்கேயாவது தவறு நடக்கலாம். அதிலும் கவனமாக இருக்க வேண்டும்.


இப்போது இருக்கும் இளைஞர்கள் மாறிவிட்டனர். நாங்கள் தவறுகள் நடக்கின்ற இடத்தில் தவறுகளை தட்டி கேட்கிறோம். ஆனால், ஆண்கள் இதை கேட்க மறுக்கின்றனர். இங்கு பல நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்று நினைக்கின்றனர். ஆனால், பக்கத்தில் இருக்கும் பெண்களுக்கு குரல் கொடுக்க யாரும் வருவதில்லை.
இங்கு பாலியல் குற்றச்சாட்டுகள் வைத்தால் இந்த சமூகம் ஆண்களை தான் மேலே தூக்கி வைத்து பேசுகின்றது. குறைகளெல்லாம் பெண்கள் மீதே வைக்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் தேவையில்லாத கருத்துகளை முன்வைத்து பதிவிடுகின்றனர். என்னுடைய வேண்டுகோள் தவறான கருத்துகளை பதிவிடும் ஊடகங்களை தடை செய்யுங்கள். அவர்கள் எந்த செய்தியாளர் சந்திப்பிற்கும் வரக்கூடாது.

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், நடிகர் சங்கத்திற்கும் இடையேயான பிரச்னை குறித்து நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் பேசினேன். அனைவரும் உட்கார்ந்து பிரச்னையை முதலில் சரி செய்ய வேண்டும்" என்றார் ராதிகா.

Share this story