ராகவா லாரன்ஸ் நடிக்கும் அடுத்த 3 படங்களின் அப்டேட்...!

நடிகர் ராகவா லாரன்ஸ் காஞ்சனா 4, பென்ஸ், கால பைரவா என அடுத்தடுத்து 3 படங்களில் நடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
நடிகர், இயக்குநர், நடனக் கலைஞர் என பல முகங்கள் கொண்டவர் ராகவா லாரன்ஸ். ஆதரவற்ற, மாற்றுத் திறனாளிகளுக்கு அவரது அறக்கட்டளை மூலம் உதவி செய்து வருகிறார். இவர் நடித்து இயக்கிய முனி திரைப்படம் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அதன் தொடர்ச்சியாக முனி - 2 எனும் காஞ்சனா எனற படத்தை இயக்கினார். திரைப்படத்தை 2011 ஆம் ஆண்டு லாரன்ஸ் இயக்கி நடித்திருந்தார். இப்படமும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூலைக் குவித்தது.
தொடர்ந்து, காஞ்சனா - 2 காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகத்தைஇயக்கினார். இதனைத் தொடர்ந்து லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா - 4 திரைப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே, நோரா ஃபதேஹி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த நிலையில் தனது அடுத்தடுத்த படங்கள் குறித்தும் லாரன்ஸ் பேசியுள்ளார். அதில், அடுத்ததாக இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கதையில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் 'பென்ஸ்' படத்தில் லாரன்ஸ் நடிக்கவுள்ளார்.
எல்சியூ திரைப்படமாக உருவாகும் இந்தப் படம் அடுத்தாண்டு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இத்துடன், தெலுங்கு இயக்குநர் ரமேஷ் வர்மா இயக்கத்தில் சூப்பர் ஹீரோ படமான ‘ காலபைரவா' படத்தில் லாரன்ஸ் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் அறிவிப்பு கடந்தாண்டு வெளியானது. காலபைரவா திரைப்படமும் அடுத்தாண்டு வெளியீடாக திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக லாரன்ஸ் நடிப்பில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் அவருடைய நடிப்பு பெரிதும் பேசப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.