‘எம்புரான்’ பட தயாரிப்பாளருக்கு சொந்தமான இடங்களில் சோதனை!

சென்னையில் எம்புரான் படத்தின் தயாரிப்பாளருக்கு தொடர்புடைய 5 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
அண்மையில் மோகன்லால் நடிப்பில் வெளியான “எம்புரான்” படத்தில், குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றதற்கு வலதுசாரி அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில், எம்புரான் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனம் மீது ஏற்கனவே நிதி மோசடி வழக்கு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, கடந்த 2017 ஆம் ஆண்டு கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனத்திற்கு தொடர்புடைய 76 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
அதன் முடிவில், 5 ஆண்டுகளில் 1,107 கோடி ரூபாய் வருமானத்திற்கு வரி செலுத்தாமல் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கோகுலம் சிட் பண்ட்ஸ் நிதி நிறுவனத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
மேலும் நீலாங்கரையில் உள்ள அந்நிறுவனத்தின் உரிமையாளர் கோகுலம் கோபாலன் வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இவற்றுடன் சென்னையில் உள்ள 5 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.