“ரஜினி, கமல் தான் அபூர்வ சகோதரர்கள்” - சிவகார்த்திகேயன்
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அமரன்’. இப்படத்தை கமல் தயாரித்திருக்க சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் ‘ஹே மின்னலே’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இப்படம் வருகிற தீபாவளியன்று(31.10.2024) வெளியாகவுள்ளது. இதனால் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் மணிரத்னம், தயாரிப்பாளர் தாணு, லோகேஷ் கனகராஜ், மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். விழா மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
அப்போது கமல் குறித்து பேசிய அவர், “கமல் சாருக்கு நான் பயங்கரமான ரஜினி ரசிகர் என நல்லா தெரியும். ஆனால் அதை எதையுமே மனதில் வைத்துக் கொள்ளாமல், ‘அதனால என்ன. இந்த பையன் நல்லா பன்றான். என்கரேஜ் பன்னுவோம். இந்தப் படத்துல நல்லா பண்ணட்டும்’ என்றார். இதுவரைக்கும் அவர் என்கிட்ட பாசமா ரொம்ப அன்பாதான் நடந்துக்கிறார். அதனால்தான் அவர் உயர்ந்த இடத்தில் இருக்கிறார். அதை அவர்கிட்ட இருந்து நான் கத்துக்க நினைக்கிறேன். அதே மாதிரி கமல் சார் இந்தப் படத்தை தயாரித்திருப்பதால், முதல் நாளே ரஜினி சார் பார்த்து விடுவார். அதுதான் அவங்க இரண்டு பேருக்கும் இடையில் உள்ள நட்பு. எனக்கு தெரிந்து அபூர்வ சகோதரர்கள் என்பது இவர்கள் இரண்டு பேருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்” என்றார்.