“சாரி...” - திருப்பதி லட்டு விவகாரம் குறித்து ரஜினி
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் திருப்பதி லட்டில் விலங்களின் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியதையடுத்து அரசு தரப்பில் லட்டை ஆய்வுக்குட்படுத்தினர். அதில் லட்டு தயாரிக்கும் நெய்யில் விலங்குகளின் கொழுப்பு கலப்படமானது தெரியவந்தது. இதையடுத்து இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பேசு பொருளாக மாறியது. இதையடுத்து ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்பதாக கூறி நடிகரும் ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் 11 நாள் விரதம் இருந்து வருகிறார். இதனிடையே தோஷங்கள் விலக பொதுமக்களும் விளக்கேற்றும்படி திருப்பதி தேவஸ்தானம் வேண்டுகோள் வைத்திருந்தது.
இதையடுத்து பிரகாஷ் ராஜ், இந்த விகாரத்தில் விரதம் இருப்பதில் காட்டும் முக்கியத்துவத்தை, சம்பந்தபட்ட கோயில் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சியுங்கள் என விமர்சித்து வந்தார். இதனிடையே கார்த்தி மெய்யழகன் பட விழாவில் நகைச்சுவையாக லட்டு குறித்து பேச மறுப்பு தெரிவிக்க, இதை சீரியஸாக எடுத்துக் கொண்ட பவன் கல்யாண் சனாதன விஷயங்களைப் பற்றி கருத்து தெரிவிக்கும் முன் 100 முறை யோசித்து பேச வேண்டும் என எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து கார்த்தி பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோர அதற்கு பவன் கல்யாண் தற்செயலாக நடந்ததை புரிந்துகொள்ள முடிகிறது என்று கூறி சமாதானமானார். அதைத் தொடர்ந்து லட்டு விவகாரத்தில் பாவம் போக்க ஜெகன் மோகன் திருப்பதி செல்ல இருந்தாக செய்தி வெளியான நிலையில், தற்போது அந்த பயணத்தை ரத்து செய்துள்ளாதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் இந்த லட்டு விவகாரம் குறித்து ரஜினிகாந்த் பேசியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்திடம் செய்தியாளர் ஒருவர், “நீங்க மிகப்பெரிய ஆன்மீகவாதி, திருப்பதி லட்டு விவகாரத்தில் உங்கள் கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு ரஜினி “சாரி. நோ கமெண்ட்ஸ்” என பதிலளித்துள்ளார். அதைத் தொடர்ந்து வேட்டையன் படம் குறித்த கேள்விக்கு, “வேட்டையன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும்” என ரஜினி பதிலளித்துள்ளார்.