'கூலி': ரஜினிகாந்த் கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியானது

rajinikanth

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக 'கூலி' உருவாகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் சுருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதற்கிடையே, படத்தின் வணிகத்திற்காக பிற மொழி நட்சத்திர நடிகர்களை நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் முயன்று வருவதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், இப்படத்தின் கதாபாத்திரங்களின் அறிமுகங்கள் விரைவில் துவங்கும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.


அதன்படி முன்னதாக, கூலி படத்தில் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா, நடிகை சுருதி ஹாசன், மலையாள நடிகர் சவுபின் சாஹிர், நடிகர் சத்யராஜ் மற்றும் நடிகர் உபேந்திரா ஆகியோரின் போஸ்டர்களை படக்குழு பகிர்ந்து இருந்தது. இதனையடுத்து, ரஜினிகாந்த்தின் போஸ்டருக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில், 'கூலி' படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தேவா கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் வைரலாகி வருகிறது.

Share this story