“அரசியலுக்கு வந்திருந்தால்... நிம்மதி, பணம் எல்லாத்தையும் இழந்திருப்பேன்”- ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என எம்ஜிஆர் கூறியதாக ஜானகி அம்மையார் என்னிடம் தெரிவித்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை வானகரத்தில் அதிமுக சார்பில் ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா நடைபெற்றுவருகிறது. விழாவில் ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா மலரை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். தொடர்ந்து ஜானகி ராமச்சந்திரன் புகைப்படத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நடிகைகள் வெண்ணீராடை நிர்மலா, சச்சு, குட்டி பத்மினி ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக உரையாற்றிய நடிகர் ரஜினிகாந்த், “திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என எம்ஜிஆர் கூறியதாக ஜானகி அம்மையார் என்னிடம் தெரிவித்தார். 2017 ஆம் ஆண்டு நான் அரசியலுக்கு வரேன்னு சொன்னதும் நிறைய பேரு ஆலோசனை சொன்னார்கள். அந்த ஆலோசனைகளை கேட்டிருந்தால் நிம்மதி, பணம் எல்லாத்தையும் இழந்திருப்பேன். அதிமுகவின் பிரம்மாஸ்திரம் இரட்டை இலை. இரட்டை இலை என்ற பிரம்மாஸ்திரம் முடக்கப்பட்டபோது அதனை மீட்டெடுக்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு கட்சி நலனுக்காக விட்டுக் கொடுத்தவர் ஜானகி ராமச்சந்திரன் அம்மையார். அரசியல் சரிவரவில்லை என்றவுடன் ஜானகி அம்மையார் அவர்கள் பெருந்தன்மையோடு ஒதுங்கி கொண்டார்கள்.  அதிமுகவுக்காக மிகப்பெரிய தியாகத்தை செய்தவர் ஜானகி ராமச்சந்திரன்” என்றார்.

Share this story