சமூக கருத்து சொல்லும் ரஜினியின் கமர்ஷியல் திரைப்படம்... ’வேட்டையன்’ 2ஆம் நாள் வசூல் என்ன?

vettaiyan

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 10ஆம் தேதி வெளியான வேட்டையன் திரைப்படம், 2 நாட்களில் இந்தியா முழுவதும் சேர்த்து 55.5 கோடி வசூல் செய்துள்ளது. லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டக்குபத்தி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் நடித்துள்ள திரைப்படம் ‘வேட்டையன்’. அனிருத் இசையமைத்துள்ள வேட்டையன் திரைப்படம் வியாழனன்று (அக்.10) உலகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

வேட்டையன் திரைப்படம் போலீஸ் என்கவுண்டரால் தவறு செய்யாதவர்கள் கொல்லப்படுவது, பயிற்சி வகுப்பின் பேரில் நடக்கும் ஊழல் ஆகிய பிரச்சனைகள் மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படம் பல்வேறு விவாதங்கள் மற்றும் கேள்விகளை பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அதே வேளையில் ரஜினி ஹீரோயிஸத்துடன் சமூக கருத்துக்கள் நிறைந்த படமாக வேட்டையன் உள்ளதாக நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

மேலும் ஃபகத் ஃபாசில், ரித்திகா சிங் ஆகியோரது நடிப்பு மற்றும் அனிருத் பின்னணி இசை ஆகியவை பாராட்டை பெற்று வருகிறது. வேட்டையன் வெளியான முதல் நாளில் இந்திய அளவில் 31 கோடி வசூல் செய்த நிலையில், இரண்டாம் நாளான ஆயுத பூஜையன்று (அக்.11) இந்தியா முழுவதும் 23.8 கோடி வசூல் செய்துள்ளது.

சாக்னில்க் இணையதளம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, தமிழ்நாட்டில் நேற்று மொத்தமாக 21.35 கோடி வசூல் செய்துள்ளது. அதேபோல் தெலுங்கில் 2 கோடியும், ஹிந்தியில் 40 லட்சமும் வசூல் செய்துள்ளது. மொத்தமாக 2 நாட்களில் இந்தியா முழுவதும் 55.5 கோடியும், தமிழ்நாட்டில் மட்டும் 49.1 கோடியும் வசூல் செய்துள்ளது. வார இறுதியில் வேட்டையன் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

Share this story