ரஜினிகாந்த் உடல்நலம் பெற வேண்டி திருவொற்றியூர் கோயிலில் மகள் சௌந்தர்யா பிரார்த்தனை!
ரஜினிகாந்த் பூரண உடல்நலம் பெற வேண்டி அவரது இளைய மகள் செளந்தர்யா, திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பிரபல நடிகர் ரஜினிகாந்த் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் நடித்துள்ள ’வேட்டையன்’ திரைப்படம் வரும் அக்டோபர் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதனையடுத்து தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ’கூலி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், நேற்று முன்தினம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். ரஜினிக்கு ரத்த நாளத்தில் வீக்கம் இருந்ததால் அறுவை சிகிச்சையின்றி ஸ்டண்ட் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஐசியூவில் இருந்து தனி வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில், ரஜினிகாந்தை மருத்துவக் குழுவினர் கண்காணித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் இன்று வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நாளை டிஸ்சார்ஜ் என தகவல் வெளியாகியுள்ளது.ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டி அவரது ரசிகர்கள் பல்வேறு பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்த் பூரண உடல் நலம் பெற வேண்டி திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலில் ரஜினிகாந்த் இளைய மகள் செளந்தர்யா தனது கணவருடன் பிரார்த்தனை செய்தார். அப்போது அங்கிருந்த பக்தர் ஒருவர் ரஜினி உடல் நிலை எப்படி இருக்கிறது என்று கேட்டதற்கு அவர் நலமுடன் இருக்கிறார் என்று சௌந்தர்யா கூறினார். தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலில் தியாகராஜ சுவாமி, ஆதிபுரீஸ்வரர், வட்டப்பாறை அம்மன், வடிவுடையம்மன் சன்னதிகளுக்கு சென்று வழிபட்ட செளந்தர்யா, பிறகு அருகில் இருக்கக்கூடிய வட குரு ஸ்தலம் என்று அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி கோயிலுக்கும் சென்று வழிபாடு நடத்தினார்.