ரோட்டர்டாம் விழாவில் பாராட்டு பெற்ற ராம்- சிவாவின் ’பறந்து போ’ திரைப்படம்

ram siva

சர்வதேச திரைப்பட விழாவான 54வது ரோட்டர்டாம் திரைப்பட விழாவில், லைம்லைட் பிரிவில் இயக்குநர் ராமின் ’பறந்து போ’ திரைப்படம் சமீபத்தில் திரையிடப்பட்டது.
 

 ’கற்றது தமிழ்’ ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம், ‘பறந்து போ’. இதில் மிர்ச்சி சிவா முதன்மை கதாபாத்திரத்திலும் கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ், விஜய் ஆண்டனி, மாஸ்டர் மிதுல் ரியான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் இணைந்து செவன் சீஸ், செவன் ஹில்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தின் பின்னணி இசையை யுவன் ஷங்கர் ராஜா அமைத்துள்ளார், இசை சந்தோஷ் தயாநிதி. மதி VS படத்தொகுப்பு செய்திருக்கும் இந்த படத்திற்கு, NK ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.



சர்வதேச திரைப்பட விழாவான 54வது ரோட்டர்டாம் திரைப்பட விழாவில், லைம்லைட் பிரிவில் ’பறந்து போ’ திரைப்படம் சமீபத்தில் திரையிடப்பட்டது. ரோட்டர்டாமின் உறையும் குளிரிலும் திரைப்படத்தை காண அரங்கம் நிரம்பியது. பறந்து போ திரையிடல் முடிந்த பின் பார்வையாளர்கள் அரங்கம் நிறைந்த கைதட்டல்களை அளித்து பாரட்டினர். சர்வதேச பார்வையாளர்களால் 'பறந்து போ' திரைப்படம் பெரிதும் கொண்டாடப்பட்டது.


இத்திரையிடலில் இயக்குநர் ராம், மிர்ச்சி சிவா, குழந்தை நட்சத்திரம் மிதுல் ரியான் மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த நிகழ்வின் போட்டோக்களும் வீடியோக்களும் மிர்ச்சி சிவா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். திரைப்பட விழா முடிந்து, வரும் 13ஆம் தேதி சென்னை திரும்புவதாக முன்பே இயக்குநர் ராம் தெரிவித்திருந்தார்.



அப்பாவும் மகனும் மேற்கொள்ளும் பயணத்தை மையமாக வைத்து நகைச்சுவையாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் மொத்தமாக 23 பாடல்கள் உள்ளதாக பாடலாசிரியர் மதன் கார்க்கி தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மிர்ச்சி சிவாவுடன் இயக்குநர் ராம் இணைந்துள்ளதால் இந்த படம் எப்படியாக இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் ஆவல் ஏற்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்கு இப்படம் திரையரங்குகளில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 
ஏற்கனவே ராம் இயக்கத்தில், ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் ரிலீஸுக்கு தயராக உள்ளது. இந்த ப்டத்தில் நிவின் பாலி, சூரி மற்றும் அஞ்சலி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். மார்ச் மாதம் வெளியாகவுள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.‘ஏழு கடல் ஏழு மலை திரைப்படமும் கடந்த ஆண்டு ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இயக்குநர் ராமின் ‘பேரன்பு’, ‘ஏழு கடல் ஏழு மலை’ , ‘பறந்து போ’ என வரிசையாக அவரது படங்கல் படமும் ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டுள்ளன.

Share this story