2026-ல் முதல் பாகத்தை வெளியிட முடிவு: ‘ராமாயணம்’ படப்பிடிப்பு திட்டங்கள் என்ன?
நிதேஷ் திவாரி இயக்கி வரும் ’ராமாயணம்’ படப்பிடிப்பு திட்டங்கள் என்னென்ன என்பது தெரியவந்துள்ளது. இந்திய திரையுலகில் அதிகப் பொருட்செலவில் உருவாகி வரும் படமாக ‘ராமாயணம்’ இருக்கிறது. நிதேஷ் திவாரி இயக்கி வரும் இந்தப் படத்தில் ரன்பீர் கபூர், யஷ், சன்னி தியோல், சாய் பல்லவி, நமித் மல்கோத்ரா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இதன் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்கியது. தற்போது முதல் பாகத்தில் ரன்பீர் கபூர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி முடித்திருக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு முடிவடைந்தது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. மேலும், இதில் ரன்பீர் கபூர் ராமராக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராவணனாக நடிக்கும் யஷுக்கான படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்குகிறது. அவரும் ஒரே கட்டமாக தனது காட்சிகளை முடித்துக் கொடுக்க திட்டமிட்டுள்ளார். சன்னி தியோல் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு அடுத்தாண்டு கோடையில் தொடங்குகிறது. அவர் இந்தப் படத்தில் ஹனுமனாக நடிக்கவுள்ளார். ரன்பீர் கபூர், சன்னி தியோல், யஷ் ஆகியோர் இணைந்து நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஆகஸ்ட்டில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். முதல் பாகத்திற்கான கிராபிக்ஸ் காட்சிகளின் பணிகள் அனைத்தும் முடித்து 2026-ம் ஆண்டு முதல் பாகத்தினை திரைக்கு கொண்டுவர முனைப்புடன் பணிபுரிந்து வருகிறது படக்குழு.