அறிக்கை வெளியிட ரவி மோகன்- ஆர்த்தி ரவிக்கு தடை.. சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு...!

நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி தம்பதியர் பொதுவெளியில் பரஸ்பரம் அவதூறு கருத்துக்கள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நடிகர் ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ஆகியோரது விவாகரத்து வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு திருமண விழாவிற்கு பாடகி கெனிஷாவுடன் ரவிமோகன் ஜோடியாக வருகை தந்தார். இதனையடுத்து, இந்த விவகாரத்தில் நீண்ட நாட்களாக மௌனம் காத்து வந்த ஆர்த்தி ரவி, முதல் முறையாக நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து இருவருக்கும் இடையே அறிக்கை போர் மூண்டு, குற்றச்சாட்டுகளை வாரி இறைத்தனர். இதில் இறுதியாக ஆர்த்தி வெளியிட்ட அறிக்கையில், தங்கள் வாழ்வில் இருளைக் கொண்டு வந்தது மூன்றாவது நபர் என கெனிஷாவை ஆர்த்தி மறைமுகமாக குற்றம் சாட்டி இருந்தார்.
இந்நிலையில், தனக்கு எதிராக அவதூறு கருத்துக்களை தெரிவிக்க ஆர்த்தி மற்றும் அவரது தாய்க்கு தடை விதிக்க கோரி நடிகர் ரவி மோகன் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தங்களுக்கிடையில் உள்ள பிரச்சினை குறித்து ரவி மோகன் - ஆர்த்தி ஆகிய இருவரும் இனி எந்த அறிக்கையும் வெளியிடக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.இருதரப்பும் பரஸ்பரம் சமூக வலைதளத்தில் தெரிவித்த கருத்துக்களை நீக்கவும், சமூக வலைதளங்களில் நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி தம்பதியினர் குறித்த செய்திகளை வெளியிடவும் தடை விதிக்கப்பட்டது. முன்னதாக, இரு தரப்பினரும் பரஸ்பரம் எந்த அவதூறு கருத்துக்களையும் தெரிவிக்க மாட்டோம் என்றும், இருவரும் ஏற்கனவே பதிவு செய்த பதிவுகளை நீக்கி விடுவதாகவும் தெரிவித்தனர்.