ரவி மோகன் விவகாரம் : அவதூறு பரப்பியவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பிய பாடகி கெனிஷா பிரான்சிஸ்...!

ரவி மோகன் விவகாரத்தில் அவதூறு பரப்பியவர்களுக்கு பாடகி கெனிஷா பிரான்சிஸ் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ரவி மோகன் - ஆர்த்தி தம்பதி விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த நிலையில், வழக்கு விசாரணையில் உள்ளது. இந்நிலையில், ரவி மோகனுடனான மணமுறிவுக்கு மூன்றாவது நபர் தான் காரணம் என கெனிஷா பிரான்சிஸின் பெயரைக் குறிப்பிடாமல் ஆர்த்தி தெரிவித்து இருந்தார். இதையடுத்து பாடகி கெனிஷாவுக்கு எதிராக பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.இந்நிலையில், ரவி மோகன் விவகாரத்தில் சமூக வலைதளங்களில் ஆபாச கருத்துகள் பதிவிட்டவர்கள் மற்றும் அவதூறு பரப்புவோருக்கு கெனிஷா பிரான்சிஸ் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கெனிஷா பிரான்சிஸின் வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கையில், ரவி மோகன் விவகாரத்துக்கு கெனிஷா பிரான்சிஸே காரணம் என சமூக வலைதளங்களில் சிலர் தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாகவும், அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் திரட்டப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கெனிஷாவுக்கு பாலியல் வல்லுறவு மிரட்டல் மற்றும் ஆபாச அர்ச்சனைகள், கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளத்தில் மிரட்டல் விடுத்தவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்ட நிலையில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.