சூர்யா படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்த ராயன் நடிகர் : நெகிழ்ச்சி பதிவு..!

surya

சூர்யா நடித்த ’கங்குவா’ திரைப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தின் புரமோஷன் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற புரமோஷன் விழாவில், ’ராயன்’ படத்தில் நடித்த நடிகர் கலந்துகொண்டு, “சூர்யாவின் படத்தில் நான் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளேன்” என்று நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்டமான திரைப்படம் ’கங்குவா’ என்பது குறிப்பிடத்தக்கது. 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்த படம் சுமார் பத்து மொழிகளில் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில், சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய நகரங்களில் புரமோஷன் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ’ராயன்’ படத்தின் நடிகர் சந்திப் கிஷான் கலந்து கொண்டு, சூர்யாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், சூர்யா நடித்த 'வாரணம் ஆயிரம்' திரைப்படத்தில் கௌதம் மேனனின் உதவி இயக்குநராக பணிபுரிந்த போது சூர்யாவைப் பார்த்தேன், இப்போதும் அவரின் எளிமை மாறவில்லை என்று கூறியுள்ளார். சூர்யாவின் பண்பு, பணிவு, கடின உழைப்பு எனது மனதை கவர்ந்தது என்றும் தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ’வாரணம் ஆயிரம்’ திரைப்படம் 2008ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி வெளியான நிலையில், 16 ஆண்டுகள் கழித்து அதே தேதியில் ’கங்குவா’ திரைப்படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Share this story