கேளிக்கை வரி குறைப்பு... நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசு...!

நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்த கேளிக்கை வரி குறைப்பை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளது.
தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் 8 சதவிகிதம் கேளிக்கை வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனை குறைக்க வேண்டும் என நீண்ட நாட்களாக திரையுலகினர் தமிழக அரசை நாடி வந்தனர்.அந்த வகையில் கமல்ஹாசனும் கடந்த பிப்ரவரியில் சென்னையில் நடந்த ஃபிக்கி மீடியா மற்றும் பொழுதுபோக்கு தொழில்துறை கருத்தரங்கத்தில், துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில் கேளிக்கை வரியில் இருந்து முழு வரிவிலக்கு வேண்டும் என வேண்டுகோள் வைத்தார். இதனை ஏற்றுக் கொண்ட துணை முதல்வர், முதல்வர் ஸ்டாலினிடன் இந்த வேண்டுகோளை எடுத்து செல்வேன் என்றும் திரையுலகினர் மகிழ்கின்ற வகையில் முதல்வர் சட்டமன்றத்தில் இது குறித்த அறிவிப்பை அறிவிப்பார் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் திரைப்படங்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளால் வசூலிக்கப்படும் கேளிக்கை வரியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதாவது 8 சதவிகிதம் இருந்த வரியை 4 சதவிகிதமாக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.