‘ரெட்ரோ’ : உலகளவில் ரூ.234 கோடி வசூல்... அதிகாரப்பூர்வமாக அறிவித்த படக்குழு...

surya

‘ரெட்ரோ’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.234 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

2டி நிறுவனம் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் இணைந்து தயாரித்த படம் ‘ரெட்ரோ’. சக்தி பிலிம் பேக்டரி வெளியிட்ட இப்படத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே, நாசர், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படம் விமர்சன ரீதியாக பெரிதாக எடுபடவில்லை என்றாலும், வசூல் ரீதியாக குறை வைக்கவில்லை. இப்படத்தை பார்த்துவிட்டு ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் ’ரெட்ரோ’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.234 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. எனினும் இது தொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டரின் ஓரத்தில் திரையரங்கு மற்றும் திரையரங்கு அல்லாத வசூல் என்று சிறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.



இதன் மூலம் திரையரங்க வசூலுடன் சேர்த்து ஓடிடி, சாட்டிலைட் உரிமை உள்ளிட்டவற்றுக்கான தொகையும் இதில் அடக்கம் என்பதை படக்குழு மறைமுகமாக குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. எனினும், இதனை வைத்து நெட்டிசன்கள் பலரும் படக்குழுவை விமர்சித்து வருகின்றனர். இதுவரை திரையரங்க வசூல் நிலவரம் மட்டுமே மற்ற படங்களுக்கு வெளியிடப்பட்டு வந்த நிலையில், புதிதான திரையரங்கு அல்லாத வருவாயையும் சேர்த்து ஒட்டுமொத்த வசூலாக காட்டுவது எப்படி சரியாகும் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

Share this story