அனுமானாக அவதாரம் எடுத்த ரிஷப் ஷெட்டி : ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

risabh shetty

ரிஷப் ஷெட்டி நடிக்கும் தெலுங்கு படமான ‘ஜெய் ஹனுமான்’ படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியான தெலுங்கு படம் ‘ஹனுமான்’. தேஜா சஜ்ஜா நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதன் எதிரொலியாக ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் உலக அளவில் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் அடுத்த பாகம் உருவாக உள்ளது.
 
இதனை முதல் பாகத்தை இயக்கிய பிரசாந்த் வர்மாவே இயக்குகிறார். இதில் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நாயகனாக நடிக்கிறார். படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.


 இந்தப் படத்தில் ஹனுமானாக நடிக்கிறார் ரிஷப் ஷெட்டி. நீண்ட தலைமுடி, தாடியுடன் கூடிய தோற்றத்தில் கையில் ராமர் சிலையை பற்றிக் கொண்டிருக்கிறார். காவி உடை அணிந்து, கட்டுமஸ்தான உடலுடன் கூடிய ரிஷப் ஷெட்டியின் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் படம் ஐமேக்ஸ் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகிறது. அடுத்த ஆண்டு இறுதியில் படம் திரைக்கு வரும் என தெரிகிறது.

Share this story