‘சூர்யா 45’; முழு கவனத்தை செலுத்தி வரும் ஆர்.ஜே.பாலாஜி
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படத்தையடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இப்படம் அவரின் 44வது திரைப்படமாக உருவாகிவரும் நிலையில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே சூர்யா, வெற்றி மாறனின் வாடிவாசல் படத்தில் கமிட்டாகியிருந்தார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்திலும் ஒரு படம் நடிக்க கமிட்டானார். இதில் சுதா கொங்கரா படம் சில காரணங்களால் தொடங்கப்படவில்லை. ஆனால் இப்படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டதாகக் கூறப்பட்டு வருகிறது. வாடிவாசல் படம் ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படம் சூர்யாவின் 45வது திரைப்படமாக உருவாகவுள்ளதாகவும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் வாடிவாசல் படத்திற்கு முன்பே முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஆர்.ஜே.பாலாஜி சூர்யாவை இயக்கவுள்ளதாகத் தெரியும் சூழலில் இந்தப் படம் முக்கியப் படமாக பார்க்கப்படுகிறது. அதனால் ஆர்.ஜே. பாலாஜி இந்தப் படத்திற்கு முழு கவனத்தை செலுத்தி வருவதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்பு ஆர்.ஜே.பாலாஜி ‘மூக்குத்தி அம்மன்’, ‘வீட்ல விசேஷம்’ உள்ளிட்ட படங்களை என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கியிருந்தார். மேலும் விஜய்யிடம் முன்னதாக ஒரு கதை கூறி பின்பு அது கைகூடாமல் போனது குறிப்பிடத்தக்கது.