ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் வருகிற நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இப்படத்தையடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இப்படம் அவரின் 44வது திரைப்படமாக உருவாகிவரும் நிலையில் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே சூர்யா, வெற்றி மாறனின் வாடிவாசல் படத்தில் கமிட்டாகியிருந்தார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்திலும் ஒரு படம் நடிக்க கமிட்டானார். இதில் சுதா கொங்கரா படம் சில காரணங்களால் தொடங்கப்படவில்லை. ஆனால் இப்படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டதாகக் கூறப்பட்டு வருகிறது. வாடிவாசல் படம் ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை.
We proudly announce #Suriya45 – a groundbreaking collaboration featuring the versatile @Suriya_offl🔥, the musical legend @arrahman❤️, and the talented @RJ_Balaji. A powerful journey begins!💥@prabhu_sr ✨ pic.twitter.com/7O37KDIOqy
— DreamWarriorPictures (@DreamWarriorpic) October 14, 2024
இதனிடையே ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் இந்தப் படம் சூர்யாவின் 45வது படமாக உருவாகும் எனவும் கூறப்பட்டது. இந்த நிலையில் சூர்யா 45வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. முன்பு தகவல் வெளியானது போல ஆர்.ஜே. பாலாஜியே இப்படத்தை இயக்குகிறார். மேலும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனமே படத்தை தயாரிக்க ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இது தொடர்பான அறிவிப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் வேல் மற்றும் அரிவாள் இடம் பெற்றுள்ளது. மேலும் அதில் திருநீறு, குங்குமம் என பக்தி பரவசமூட்டும் அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. இதனால் ஆன்மீகக் கதைகளத்தை பின்னணியாக கொண்டு காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாகும் என தெரிகிறது.
இதற்கு முன்பு ஆர்.ஜே.பாலாஜி ‘மூக்குத்தி அம்மன்’, ‘வீட்ல விசேஷம்’ உள்ளிட்ட படங்களை என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கியிருந்தார். மேலும் விஜய்யிடம் முன்னதாக ஒரு கதை கூறி பின்பு அது கைகூடாமல் போனது குறிப்பிடத்தக்கது.