‘லியோ’ பட சம்பளபாக்கி விவகாரம்: பெப்சி தலைவர் ஆர்.கே செல்வமணி அறிக்கை.

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரிலீசுக்கு தயாராகிவரும் படம் ‘லியோ’. வரும் 19அம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் புரொமோஷன் பணிகள் படு ஜோராக நடந்து வரும் நிலையில், படத்தில் ‘நான் ரெடி தான் வரவா….’ பாடலுக்கு நடனமாடிய நடன கலைஞர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என கூறி புகார்கள் எழ துவங்கியது.
இந்த விவகாரம் குறித்து பெப்சி தலைவரான ஆர். கே செல்வமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “ இயக்குநர் லோகேஷ் ஒரு பாடலுக்கு 2000 நடனக்கலைஞர்களை கொண்டு படமாக்க விரும்பியதாக, அந்த பாடலுக்கு நடன இயக்குநரான தினேஷ் மாஸ்டர் தெரிவித்தார். அதற்காக சுமார் 1000 பேர் உறுப்பினர்களாக உள்ள பெப்சியிலிருந்து 600 நடன கலைஞர்கள் சென்றுள்ளனர் மீதமுள்ள 400 பேர் வேறு சில படங்களில் கமிடானதால், நடன கலைஞர்கள் அல்லாதவர்கள், ஓரளவு ஆட தெரிந்தவர்கள் என மொத்தமாக 1400 பேர் பனையூரில் உள்ள ‘ஆதி ஸ்ரீராம்’ ஸ்டூடியோவில் கடந்த 06.06.2023 முதல் 11.06.2023 வரை 6 நாட்கள் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அவர்களுக்கு மூன்று வேலை உணவு + பேட்டா கன்வெயன்ஸ் நாளொன்றுக்கு ரூ. 1750 வீதம் 6 நாட்களுக்கு ரூ. 10500 வழங்க முடிவெடுக்கப்பட்டு, அனைத்து உறுப்பினர்களுக்கும் ரூ. 94,60,500 மொத்தமாக செலுத்தப்பட்டது.
தற்போது ஒரு சிலர் தங்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என பேட்டியளிப்பதை கண்டேன். இது தவறான செய்தியாகும். அனைவருக்கும் ஊதியம் அனைத்தும் செலுத்தப்பட்டு விட்டது என தெரிவித்துக்கொல்கிறோம். இப்படிக்கு ஆர். கே செல்வமணி” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.