ரூ.500 நோட்டில் கைவரிசை; கோடிக்கணக்கில் அச்சிடப்பட்ட பிரபல நடிகரின் புகைப்படம்
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் தங்கம் வியாபாரி ஒருவரிடம், போலி 500 ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஏமாற்ற முயன்றுள்ளனர். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில் 1.6 கோடி மதிப்பிலான அந்த போலி நோட்டுகளில் காந்திக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகர் அனுபம் கெர் புகைப்படத்தை அச்சிட்டுள்ளனர். மேலும் அந்த ரூபாய் நோட்டுகளில் ‘ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா’-விற்கு பதிலாக ‘ரிசோல் பேங்க் ஆஃப் இந்தியா’ என்று அச்சிட்டுள்ளனர்.
இது தொடர்பான வீடியோவை தனது இஸ்டாகிராமில் பகிர்ந்த அனுபம் கெர், “ஐநூறு ரூபாய் நோட்டில் காந்தியின் புகைப்படத்திற்குப் பதிலாக எனது புகைப்படம்? எது வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அனுபம் கெர், ‘எம்எஸ் தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி’ படத்தில் சுஷாந்த் சிங்கிற்கு அப்பாவாக நடித்திருந்தார். மேலும் இவர் தற்போது கங்கனா ரனாவத் இயக்கி நடித்திருக்கும் எமர்ஜென்சி படத்தில் நடித்துள்ளார். கலைத் துறையில் அனுபம் கெர்-ன் சேவையை கெளரவிக்கும் வகையில் 2004ஆம் ஆண்டு பத்மஸ்ரீ மற்றும் 2016ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.