நன்றி சூர்யா சார், உங்களால் தான் இது சாத்தியம்... 'கார்கி' வெற்றியால் சாய் பல்லவி நெகிழ்ச்சி!
நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி சார் என நடிகை சாய் பல்லவி சூர்யாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகை சாய் பல்லவி நடிப்பில் தற்போது கார்கி திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
'ரிச்சி' படத்தின் இயக்குனர் கெளதம் ராமச்சந்திரன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். காளி வெங்கட், காலேஷ் ராமானந்த் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். பெண் மையக் கதாபாத்திரம் கொண்ட படமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா லட்சுமி இந்தப் படத்தைத் தயாரித்ததுடன் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை தமிழில் சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளனர். படத்தைப் பார்த்ததும் மிகவும் ஈர்க்கப்பட்ட சூர்யா தானே படத்தை வெளியிடுவதாக உறுதியளித்து அதை நிறைவேற்றியுள்ளார்.
கார்கி திரைப்படத்திற்கு எங்கு பார்ப்பினும் நேர்மறையான விமர்சனங்கள் தான். படத்தை அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று படம் பார்த்த எல்லாரும் தெரிவிக்கின்றனர். பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் படத்திற்கு நல்ல முன்னேற்றம் இருந்து வருகிறது.

இந்நிலையில் படத்திற்கு கிடைத்த நல்ல வரவேற்பை அடுத்து "கார்கி திரைப்படத்திற்கு அளித்த அமோக வரவேற்புக்கு நன்றி - ஜோவுக்கும் எனக்கும் இதுவும் மிகவும் ஸ்பெஷல். இது நீண்ட காலமாக நினைவில் இருக்கும் நன்றாக எழுதப்பட்ட, நன்கு தயாரிக்கப்பட்ட திரைப்படம்! பத்திரிக்கை, ஊடகங்கள், நலன் விரும்பிகள் மற்றும் பார்வையாளர்களின் அன்பு மற்றும் மரியாதையால் அனைவரின் மனங்களையும் வென்ற குழுவினருக்கு பாராட்டுக்கள்" என்று தெரிவித்திருந்தார்.
Thank you for everything Sir ! 🙏🏻 Your support has helped Gargi reach a wider audience! And Pls thank Jyotika mam for me☺️ https://t.co/SSnMUAmNCX
— Sai Pallavi (@Sai_Pallavi92) July 18, 2022
தற்போது சூர்யாவின் பதிவை மேற்கோள் காட்டியுள்ள சாய் பல்லவி "கார்கி படத்திற்காக நீங்கள் செய்த அனைத்திற்கும் நன்றி சார். உங்கள் ஆதரவினால் தான் கார்கி இவ்வளவு பரந்த பார்வையாளர்களை சென்றடைய முடிந்தது. மேலும் ஜோதிகா மேடத்திடம் என் நன்றியைத் தெரிவித்துவிடுங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

