பிரேமம்’ படத்தை முதலில் நிராகரித்த சாய் பல்லவி

premam

மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படம் மூலம் அறிமுகமானவர் சாய் பல்லவி. இதில் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானார். இப்போது தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வரும் அவர், சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘அமரன்’ படத்தில் நடித்துள்ளார். வரும் 31-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் புரமோஷனில் கலந்துகொண்ட அவர், ‘பிரேமம்’ படத்தை முதலில் எளிதாக ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சாய்பல்லவி கூறும்போது, “பிரேமம் படத்துக்காக அல்போன்ஸ் புத்திரன் என்னிடம் பேசியபோது நான் நம்ப வில்லை. அதை மோசடியான அழைப்பு என்று நினைத்ததால் அதை ஏற்கவில்லை. என் பெயரை கூகுளில் தேடிபார்த்துக்கொள்ளுங்கள், நான்தான் அழைத்திருக்கிறேன் என்று அல்போன்ஸ் புத்திரன் கூறிய பிறகுதான் பேசினோம். நடிப்பதில் எனக்கு இருந்த கண்டிஷன்களை சொன்னேன். அந்தப் படத்துக்கு முன், ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அதற்கு ஏற்ற உடையைத்தான் அணிந்திருந்தேன். ஆனால், ‘பிரேமம்’ வெளியான நேரத்தில் அந்த வீடியோ வைரலாகி மோசமான கருத்துகள் வந்தன. அதிலிருந்து இனி அதுபோல உடை அணியக் கூடாது என முடிவு செய்தேன். என் உடலைக் காட்டி நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. நான் தற்போது இருக்கும் தோற்றத்திலேயே ரசிகர்கள் என் மீது அன்பைப் பொழிகிறார்கள். அதனால் அதே பாதையில் நான் தொடர்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Share this story