அப்பா - மகள் உறவை பேசும் சமுத்திரகனியின் ‘சித்திரை செவ்வானம்’... டிரெய்லர் வெளியீடு..
பிரபல நடிகை சாய் பல்லவியின் தங்கை நடித்துள்ள ‘சித்திரை செவ்வானம்’ படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அப்பா - மகள் பாச பிணைப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள திரைப்படம் ‘சித்திரை செவ்வானம்’. சமுத்திரகனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை முன்னணி ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கியுள்ளார். முதல்முறையாக இயக்குனர் அவதாரம் எடுத்துள்ள இந்த படத்தின் கதையை இயக்குனர் விஜய் எழுதியுள்ளார். இந்த படத்தில் பிரபல நடிகை சாய் பல்லவி தங்கை பூஜா கண்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் ரீமா கல்லிங்கல், இயக்குனர் சுப்ரமணிய சிவா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார். ஏ.எல்.அழகப்பன் மற்றும் பி.மங்கையர்க்கரசி இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா மற்றும் கே.ஜி.வெங்கடேஷ் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பே ரிலீசுக்கு தயாரான இப்படம் வரும் டிசம்பர் 3-ஆம் தேதி ஜீ5 ஓடிடித்தளத்தில் நேரடியாக வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டிரெய்லரில் முழுக்க முழுக்க கிராம பின்னணியில் அழகிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அதோடு நீட் விவகாரம், பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லை, சமூக விழிப்புணர்வு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

