சாண்டியின் ‘3:33’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு
நடன இயக்குனர் சாண்டி ஹீரோவாக நடிக்கும் ‘3:33 படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடன இயக்குனரான சாண்டி, புதிய படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். ‘3:33’ (மூணு முப்பத்தி மூணு) என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் நம்பிக்கை சந்துரு இயக்கியுள்ளார். சாண்டிக்கு ஜோடியாக அறிமுக நடிகை ஸ்ருதி நடித்துள்ளார். இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹர்ஷவர்த்தன் ராமேஷ்வர் இசையமைக்கும் இப்படத்திற்கு சதீஷ் மனோகரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் ரேஷ்மா பசுபுலேதி, ரமா, மைம் கோபி, சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாம்பூ ட்ரீஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பாக ஜீவிதா கிஷோர் இந்த படத்தை தயாரித்து வருகிறார். நகைச்சுவை கலந்த பேய் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் பாடல்கள் இல்லையாம். வழக்கமான பேய் படங்களை விட முற்றிலும் மாறுபட்டு திக்... திக்...திகில் கலந்த படமாக இப்படம் உருவாகியுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இறுதிக்கட்ட பணிகள் முடிந்துள்ள இந்த படம் கடந்த அக்டோபர் 21-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படம் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாது என்று படக்குழு அறிவித்தது. இந்நிலையில் இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் டிசம்பர் 3-ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

