சந்தானத்தின் 'குலுகுலு' காமெடியில் கலக்கியதா?... இல்லை சொதப்பியதா ?... திரைவிமர்சனம் !

சந்தானத்தின் 'குலுகுலு' திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து பார்க்கலாம்.
சந்தானம் நடிக்கிற படம்னாலே… கவுண்டமணி ரேஞ்சில் வர்றவன் போறவனெல்லாம் கலாய்க்கிறதும், கட்டையைப் போடுறதுமாகவே இருப்பார்.இதில் அப்படியில்லை என்பதே முதல் ஆச்சர்யம்! அமேஸான் காட்டில் வாழ்கிற பூர்வகுடி மக்கள் மீது நடக்கிற தாக்குதலில் தப்பி பிழைத்த குழந்தைதான் சந்தானம்.ஏகப்பட்ட நாடுகள் வழியா டிராவல் பண்ணி,பதிமூணு லாங்குவேஜ் கத்துக்கிட்டு சென்னைக்கு வந்து செட்டிலாகிறார்.
நமக்கு சந்தேகம் வந்தால் கூகிளைத் தட்டிப் பார்ப்போம்… இதில் சந்தானமே நடமாடும் கூகிள்தான்.படுத்த படுக்கையா இருந்தாலும் உதவின்னு கேட்டால்,துள்ளியெழுந்து நிக்கிற கேரக்டர்.அப்படியான ஆளுகிட்ட… என் நண்பனைக் கடத்திட்டங்க,காப்பாத்துங்க என்று வந்து நிற்கிறார்கள்.இன்னொரு பக்கம்,பெரும் பணக்கார குடும்பத்தில் நடக்கும் வாரிசு சண்டையில்… தங்கச்சியவே போட்டுத்தள்ள துடிக்கும் அண்ணன் தம்பியும் அவர்களது அடியாள் கூட்டம். இவர்களுக்கு நடுவே வந்து காசு பார்க்கத் தவிக்கும் அப்பாவி காமெடியர்கள் நாலு பேர் என மூன்று டிராக்கில் போகிறது மொத்தப் படமும்.
'மேயாதமான்','ஆடை' படங்களை படங்களை இயக்கிய ரத்தினகுமார்தான் இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார். சந்தானம்,சுற்றி இருப்பவர்களை அதிகம் பேசவிட்டு அடக்கி வாசிப்பது என வேறு தளத்துக்கு பயணிக்க முயற்சித்திருக்கிறார்.நல்லாவே ஒர்க்கவுட் ஆகியிருக்கு. 'இருக்குறதுலயே கிறுக்கன்தான் டேஞ்சர்… அவன்கிட்ட நாட்டக்கொடுத்தா என்னாகும்னு நாம பார்த்துக்கிட்டிருக்கோமே!'ன்னு சொல்லும் போது, மொத்த தியேட்டரும் கிளாப்ஸ் பறக்குது.'சொந்த மொழியிலதான் யோசிக்கிறேன்… ஆனால்,பேசுறதுக்கு ஒரு ஆள்கூட இல்லங்கிறது எவ்வளவு பெரிய துயரம்' என்று சொல்லுமிடம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய 'மொழி அரசியல்' ஒரு காமெடி கதைக்குள் இப்படியொரு பேக்ட்ராப்பைக் கொண்டு வந்ததுக்கே இயக்குனரைப் பாராட்டலாம்.
படம் முழுக்க 'டார்க் காமெடி'தான். சின்னச் சின்ன கேரக்டர்கள்கூட கதைக்கு பொருத்தமாக வந்து போவது சிறப்பு.அதிலும்…அந்த பாவக்கா கொழம்பு மேட்டரை பரபர க்ளைமாக்ஸ் காட்சிவரை நீடித்திருப்பது செம!
வில்லனின் தம்பி,பாப்ஜி கேம் பிரியர் என்பதால் அந்த டீம் வர்ற ஸீன் முழுக்க பப்ஜி கேம் பார்க்கிற மாதிரியே இருக்கு! தோத்துப்போன சைனாக்காரய்ங்க தேடி வந்து பழிவாங்கறதெல்லாம்… ஸாரி,கொஞ்சம் ஓவர்! ஸ்க்ரீன் ப்ளேல இன்னும் கொஞ்சம் மெனக்கிட்டிருந்தால், முதல் பாதியில் ஸ்லோவாக நகர்வதைத் தவிர்த்திருக்கலாம்.
- V.K.சுந்தர்