“சமரசமில்லா போராளி” - துணை முதல்வர் குறித்து சத்யராஜ்
2021ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வென்றார் உதயநிதி ஸ்டாலின். இதையடுத்து மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை உதயநிதிக்கு ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரருக்கு துணை முதலமைச்சர் பதவி ஒதுக்கப்படவுள்ளதாக சமீபகாலமாக பேச்சுகள் இருந்து வந்தது.
இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய நிலையில் ஆளுநரின் ஒப்புதலுக்கு பிறகு நேற்று(29.09.2024) துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார் உதயநிதி ஸ்டாலின். இதையடுத்து அரசியல் தலைவர்கள், தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தொண்டர்கள் உட்பட அனைவரும் துணை முதலமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இதனிடையே திரைப் பிரபலங்களும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர்களில், ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன், தனுஷ், சிம்பு, கார்த்தி, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அருண் விஜய், சந்தானம், விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண், அருள்நிதி, கெளதம் கார்த்தி, மஞ்சிமா மோகன், சிபி சத்யராஜ், பிரதீப் ரங்கநாதன், நிதி அகர்வால் உள்ளிட்ட பலர் வாழ்த்தி இருந்தனர்.
இந்த நிலையில் சத்யராஜ் தற்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “அமைச்சராக இருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின், துணை முதல்வராக பொறுப்பேற்றிருப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. சமூக நீதி காப்பதில் சமரசமில்லா போராளியாக திகழும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி கொள்வதில் பெரியாரின் தொண்டனாக பெருமை கொள்கிறேன்” என்றார்.