வில்லனாக மிரட்டவுள்ள சத்யராஜ்.. ‘அங்காரகன்’ ரீலீஸ் தேதி அறிவிப்பு !

நடிகர் சத்யராஜ் நடிக்கும் ‘அங்காரகன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் சத்யராஜ், தற்போது பல மொழிகளில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ஆனால் 80-களில் மிரட்டலான வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அந்த வகையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் சத்யராஜ் வில்லனாக நடித்துள்ள திரைப்படம் ‘அங்காரகன்’. இந்த படத்தில் மிரட்டலான போலீசாக சத்யராஜ் நடித்துள்ளார்.
பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மாவிடம் உதவிய இயக்குனராக பணியாற்றிய இயக்குனர் மோகன் டச்சு இந்த படத்தை இயக்கியுள்ளார். ‘பெண்டுலம்’, ‘என் இனிய தனிமையே’, ஆகிய படங்களில் நடித்த ஸ்ரீபதி இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு’ படத்தின் மூலம் பிரபலமான மலையாள இளம் நடிகை நியா இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் நியா, ரெய்னா காரத், அங்காடித்தெரு மகேஷ், அப்புக்குட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பாடலாசிரியர் கார்த்திக் இந்த படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார். ஜூலியன் & ஜெரோமா இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்நிலையில் ஹாரர் த்ரில்லரில் உருவாகியுள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியாகிறது.