“தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் சமந்தாவின் புதிய வெப் சீரிஸ்”… சீமான் எச்சரிக்கை!
தமிழர்களைக் கொச்சைப்படுத்தும் ‘தி பேமிலி மேன் 2’ இணையத்தொடரை ஒளிபரப்புவதை ரத்து செய்யாவிட்டால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.
இந்தியாவின் பிரபல வெப் சீரிஸானா பேமிலி மேன் வெப் சீரிஸின் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் நேற்று முன்தினம் வெளியானது. ட்ரைலரில் சமந்தா இலங்கைத் தமிழ் பேசுகிறார். மேலும் அவர் இடம்பெறும் காட்சிகளில் அவர் அணிந்திருக்கும் சீருடை விடுதலைப் புலிகளின் சீருடையை ஒத்திருபதாகவும், தமிழர்களைத் தீவிரவாதிகளாக சித்தரிப்பதாகவும் கடும் குற்றசாட்டு எழுந்தது. அதையடுத்து பேமிலி வெப் சீரிஸுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பலர் குரல் எழுப்பினர். இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது.
தற்போது நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பேமிலி மேன் வெப் சீரிஸுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கை பின்வருமாறு:
“அமேசான் பிரைம் இணையத்தளத்தில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிற, ‘தி பேமிலி மேன் 2’ எனும் இணையத்தொடரின் முன்னோட்டமும், அதில் இடம்பெற்றிருக்கிற காட்சியமைப்புகளும் பேரதிர்ச்சி தருகின்றன. விடுதலைப்புலிகளைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்து, தமிழர்களை வன்முறையாளர்களாகக் காட்ட முற்படும் இத்தொடர் முழுக்க முழுக்க உள்நோக்கத்தோடும், தமிழர்கள் மீதான வன்மத்தோடும் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
இந்தியில் வெளியாகும் அத்தொடரின் கதைக்களத்தை சென்னைக்கு மாற்றி, அதில் ஒரு ஈழப்பெண்ணைப் போராளியாகச் சித்தரித்து, அப்பெண்ணின் உடையின் வண்ணம் விடுதலைப்புலிகளின் சீருடையோடு ஒத்திருக்கச் செய்திருப்பதும், அந்தப் போராளி குழுக்கும் பாகிஸ்தானின் ISI அமைப்பிற்கும் சம்பந்தமிருக்கிறது என்ற வசனமும் தற்செயலானதல்ல. ஈழத்தில் 2 இலட்சம் தமிழர்களை சிங்களப்பேரினவாதத்தின் கொடுங்கரங்களுக்குப் பறிகொடுத்துவிட்ட சூழ்நிலையிலும் மிகப்பெரும் சனநாயகவாதிகளாக நின்று அறப்போராட்டம் வாயிலாகவும், சட்டப்போராட்டம் வாயிலாகவும் உலகரங்கில் நீதிகேட்டு நிற்கிற தமிழர்களைத் திரைப்படத்தொடரின் வாயிலாகத் தீவிரவாதிகளெனக் காட்ட முனைவது வன்மையான கண்டனத்திற்குரியது.
தி பேமிலி மேன் 2 இணையத்தொடரை நாடெங்கும் ஒளிபரப்பித் தமிழர்கள் குறித்துத் தவறான கருத்துருவாக்கத்தைச் செய்ய முனைந்தால் மிக மோசமான எதிர்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.