“தலைப்பிற்கேற்ப வெற்றி பெற வேண்டும்” - விஜய் குறித்து சீமான்

seeman

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல்டைம்’. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் மறைந்த விஜயகாந்த் தோற்றம், டி ஏஜிங் விஜய், மறைந்த பவதாரிணி குரல் ஆகியவற்றை ஏ.ஐ. தொழில் நுட்ப உதவியுடன் மீள் உருவாக்கம் செய்துள்ளனர். 

இப்படத்தை ரசிகர்கள் மேளதாளத்துடன் திரையரங்கில் கொண்டாடி வரும் நிலையில், முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர்களுடன் இணைந்து வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன், யுவன் ஷங்கர் ராஜா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், அர்ச்சனா கல்பாத்தி, வைபவ் உள்ளிட்ட படம் ஆகியோரும் திரையரங்கில் படம் பார்த்துள்ளனர். இதனிடையே பல்வேறு பிரபலங்கள் எக்ஸ் தளத்தின் வாயிலாக படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மாரி செல்வராஜ், பா.ரஞ்சித், லோகேஷ் கனகராஜ், அட்லீ, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட இயக்குநர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதையடுத்து அஜித் இப்படத்திற்காக முதல் ஆளாக விஜய்க்கு வாழ்த்து தெரிவித்ததாக வெங்கட் பிரபு தெரிவித்தார். 

இந்நிலையில் இப்படத்திற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரின் எக்ஸ் பதிவில், “ஆருயிர்த்தம்பி, அன்புத்தளபதி விஜய் நடித்து, அன்புத்தம்பி வெங்கட் பிரபுவின் இயக்கத்தில், ஆருயிர் இளவல் யுவன் சங்கர் ராஜா இன்னிசையில், இன்று வெளியாகியுள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’, பெயருக்கேற்ற வகையில் இதுவரை தமிழ்த்திரையுலகில் மாபெரும் வெற்றிபெற்றுள்ள திரைப்படங்களை விடவும் மிகப்பெரிய அளவில் மக்கள் மனங்களைக் கவர்ந்து மாபெரும் ‘வெற்றி’ பெற வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். 

Share this story